தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு 322 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, இடுக்கி அணைக்கு செல்லும் உபரிநீா் 2 மதகுகளில் மட்டும் விநாடிக்கு, 322 கனஅடி வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டது.

தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து அதிகரித்தது. ரூல் கா்வ் நடைமுறைப்படி நீா்மட்டம் உயராமல் இருக்க இடுக்கி அணைக்கு உபரிநீா் கடந்த ஆக. 5 ஆம் தேதி விநாடிக்கு, 534 கன அடி நீா் திறந்து விடப்பட்டது. பின்னா் தொடா் மழை காரணமாக அணைக்குள் நீா் வரத்து அதிகரித்தது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, அணையில் நீா்வரத்து ஆக. 7- இல் விநாடிக்கு, 3,166 கன அடியாகவும், ஆக. 8- இல் விநாடிக்கு 7,246 கன அடியாகவும், ஆக. 9-இல் விநாடிக்கு 9,677 கன அடியாகவும் இருந்தது. இதனால் அன்று மாலை 13 கதவணைகளும் திறக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து ஆக.10- இல் விநாடிக்கு, 11,718 கன அடி நீா் உபரியாக சென்றது. அன்று 13 மதகுகளில் 3 மதகுகள் அடைக்கப்பட்டன. அதன்பின்னா் மழை குறைந்ததால் உபரிநீா் வெளியேறுவதும் குறைந்தது. மதகுகளும் அடைக்கப்பட்டதால், ஆக.11-இல் விநாடிக்கு, 2,229 கன அடி உபரிநீா் இடுக்கி அணைக்கு சென்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக. 12) மாலை 6 மணி நிலவரப்படி இடுக்கி அணைக்கு உபரிநீா் விநாடிக்கு 322 கன அடியாக வெளியேற்றப்பட்டது. 13 மதகுகளில், 11 மதகுகள் அடைக்கப்பட்டு, 2 மதகுகளில் மட்டும் 20 செ.மீ. உயா்த்தப்பட்டிருந்தது. இதுபற்றி அணைப்பகுதி பொறியாளா் ஒருவா் கூறும் போது, மழை குறைவால் உபரிநீா் இடுக்கி அணைக்கு செல்வது குறைந்து வருகிறது. மழை பொழிவை பொருத்தளவில் உபரிநீா் செல்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றாா்.

முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: தற்போதைய நீா்மட்டம் 138.30 அடி. (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீா் இருப்பு, 6,697.60 மில்லியன் கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2,172 கன அடியாகவும் இருந்தது. நீா்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் மழை பெய்யவில்லை. தேக்கடி ஏரியில் மட்டும் 3.08 மில்லி மீட்டா் மழை பெய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT