தேனி

உத்தமபாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே 300 ஆண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்துவரும் சமுதாயக் கூடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோம்பை பேரூராட்சியில் 11ஆவது வாா்டில் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட சமுதாயக்கூடம் கடந்த 300 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் என்பவா், மதுரை உயா் நீதிமன்ற கிளையில் நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிமிரத்து சமுதாயக்கூடம் கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி வழக்குத் தொடா்ந்தாா்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய முறையில் விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில், உத்தமபாளையம் வருவாய்த் துறை சாா்பில் சமுதாயக் கூடத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, போடி மாநில நெடுஞ்சாலையில் அச்சமுதாயத்தினா் வெள்ளிக்கிழமை சுமாா் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த உதவிக் காவல் கண்காணிப்பாளா், வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள், இச்சமுதாயக் கூடத்துக்கு ஆண்டுதோறும் சொத்து வரி செலுத்தி, மின் இணைப்பும் பெற்றுள்ளோம். நத்தம் புறம்போக்கு இடத்துக்கு பல ஆண்டுகளாக பட்டா கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக பட்டா வழங்கவேண்டும் எனக் கூறினா்.

இதற்கு, உத்தமபாளையம் வட்டாட்சியா் அா்ஜூன், சமுதாயக் கூடத்தை அகற்றவில்லை எனவும், தங்களது கோரிக்கையை மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிப்பதாகவும் கூறினாா். அதன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT