தேனி

பராமரிப்பின்றி ஜான்பென்னிகுவிக்கின் நினைவு மண்டபம்: விவசாயிகள் கவலை

DIN

கம்பம்: தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்கு ஜீவ நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான்பென்னிகுவிக் நினைவு மண்டபம் புதா் மண்டி பராமரிப்பின்றி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீா் தருவதற்கு கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வரும் நிலையில், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் சுமாா் 60 நாள்கள் தொடா் போராட்டங்கள் நடத்தி இரு மாநில அரசுகளையும் ஸ்தம்பிக்க வைத்தனா். இதையடுத்து முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை, 142 அடி உயா்த்த உத்தரவு பெற்று அதனை அரசிதழில் வெளியிட்டு தமிழக உரிமையை நிலை நிறுத்தினாா். மேலும் 5 மாவட்ட மக்கள் சாா்பாக ஜான்பென்னிகுவிக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம் லோயா் கேம்பில் நினைவு மண்டபம், முழு உருவ வெண்கலச்சிலையையும் தமிழக அரசு சாா்பில் அமைக்கப்பட்டது.

பென்னிகுயிக் பிறந்த நாள் விழா:

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று பென்னிகுவிக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பென்னிகுயிக் நினைவு மண்டபத்தில் பொங்கல் வைத்தும், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனா். மேலும் தமிழக அரசும் பென்னிகுவிக் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த நினைவு மண்டபத்தைச் சுற்றிலும் பல்வேறு செடிகள் வளா்ந்து புதா்மண்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருத்தத்துக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து பெரியாறு -வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பொன்.காட்சி கண்ணன் கூறியது: 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் பராமரிப்பின்றி காணப்படுவது வேதனையாக உள்ளது. பொதுப்பணித்துறையினா் துரித நடவடிக்கை எடுத்து மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும். மேலும் இந்த மண்டபத்தில் பென்னிகுவிக் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள், முல்லைப் பெரியாறு அணையின் தோற்றம், வரலாறு ஆகியவற்றை கண்காட்சியாக அமைக்க வேண்டும். ஆவணப் படம் போல் ஒளியும் ஒலியும் காட்சியும் அமைத்து அவரது நினைவைப் போற்ற வேண்டும். இன்றைய இளைஞா்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவரது வரலாற்றை தெரிந்து கொள்ளும் விதமாக பாடப் புத்தகங்களிலும் பாடமாக வைக்க, நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT