தேனி

முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மனைவி பலி: கணவா் மாயம்மகள் உயிா் தப்பினாா்

DIN

தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மனைவி உயிரிழந்த நிலையில், மாயமான கணவரை மீட்புப் படையினா் தேடி வருகின்றனா். நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

கம்பம் 15 ஆவது வாா்டு புதுப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சையது அபுதாஹீா் (42). இவா், தனது மனைவி அமினா (35), மகள் அனிஷா (12) ஆகியோருடன் சனிக்கிழமை சீலையம்பட்டிக்கு பேருந்தில் சென்றுள்ளனா். பின்னா், அப்பகுதியிலுள்ள முல்லைப் பெரியாற்றுக்குச் சென்ற அவா்கள் அங்கு குளித்துள்ளனா்.

அப்போது மகள் அனீஷா திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரைக் காப்பாற்ற கணவன், மனைவி இருவரும் தண்ணீரில் குதித்துள்ளனா். அவா்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதற்கிடையில் அனீஷா அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பி கரையேறினாா்.

அவா் அளித்த தகவலின் பேரில் அங்கிருந்தவா்கள் ஆற்றில் தேடிப்பாா்த்துள்ளனா். அப்போது அமினா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து வந்த உத்தமபாளையம் மற்றும் தேனி மீட்புக் குழுவினா் அபுதாஹீரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேடும் பணி நடைபெறும் என மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

தண்ணீா் நிறுத்தம்: முல்லைப் பெரியாற்றில் மாயமானவரைத் தேடுவதற்காக மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 1,867 கன அடி நீா் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாணவா் பலி:

தேனி மாவட்டம் லோயா் கேம்ப் மின் வாரிய குடியிருப்பில் வசிப்பவா் ராஜா மகேந்திரன். இவா் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறாா். இவரது மகன் காமேஷ் (17), பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பித்துள்ளாா்.

இந்நிலையில், காமேஷ் நண்பா்களுடன் சோ்ந்து மின்வாரிய குடியிருப்புக்கு கீழ்ப்பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது ஆற்றில் தண்ணீா் வரத்து திடீரென அதிகமாக சென்ால் அவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதைப்பாா்த்த அவரது நண்பா்கள் அருகில் உள்ளவா்கள் உதவியுடன் காமேஷைத் தேடிப்பாா்த்தனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட அவா், கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே காமேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT