தேனி

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்வு: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

24th Jul 2021 07:58 PM

ADVERTISEMENT

வைகை அணை நீர்மட்டம் சனிக்கிழமை 68.50 அடியாக உயர்ந்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரவாசிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, மூல வைகையில் தொடர் நீர் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம், கடந்த ஜூலை 8-ம் தேதி 66 அடியாக உயர்ந்தது. இதனால், வைகை ஆற்றங்கரையோரவாசிகளுக்கு பொதுப் பணித் துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு 68.50 அடியாக உயர்ந்தது. 

இதையடுத்து, ஆற்றங்கரையோரவாசிகளுக்கு பொதுப் பணித்துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதும், 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும். முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் நிலையில், வைகை அணை நீர்மட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 69 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணைகளின் நிலவரம் : வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 971 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,434 மில்லியன் கன அடி. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் முதல் போக நெல் சாகுபடிக்கும், மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கும் விநாடிக்கு 769 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 133.80 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து  7,139 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,586 மில்லியன் கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 910 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : vaigai dam flood alert
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT