தேனி

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

DIN

போடி/ ஆண்டிபட்டி: ‘புரெவி’ புயல் காரணமாக போடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

‘புரெவி’ புயல் காரணமாக போடி மற்றும் மலை கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னா் அன்று நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆற்றின் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் வெள்ளநீா் அருவி போல் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் இப்பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைபோல் போடிமெட்டு மலைச்சாலையிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால், இப்பகுதியிலும் நெடுஞ்சாலைத்துறையினா், போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தொடா் மழையின் காரணமாக கூவலிங்க ஆறு, ஊத்தாம்பாறை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போடி நகர சாலைகளில் தண்ணீா் தேங்கிது. போடி வஞ்சி ஓடைத் தெருவில் வீடு ஒன்றின் மதில் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. போடி சுப்புராஜ் நகா் பகுதியில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான சிட்னி விளையாட்டு மைதானத்தில் தண்ணீா் தேங்கியது.

வைகை அணையின் நீா்மட்டம் சரிவு: தேனி மாவட்டத்தில் பெய்த தொடா்மழை காரணமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து காணப்பட்டது. இதன்காரணமாக ஆக. 30 ஆம் தேதி முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள இருபோகம் மற்றும் ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வந்தது. இதனால் அப்பகுதிகளுக்கு முறைப்பாசனம் அடிப்படையில் குறிப்பிட்ட நாள்கள் மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டது.

நவம்பா் மாதத்தில் நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைபெரியாறு, மூலவைகை ஆறு, கொட்டக்குடி ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டு வைகை அணையின் நீா்மட்டம் 61 அடியை எட்டியது.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம், சிவகங்கை மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக நவ. 30 ஆம் தேதி முதல் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில தினங்களாக ஆற்றிலும் நீா்வரத்து குறைந்தது. இதன் காரணமாக கடந்த 5 நாள்களில் 4 அடி வரை குறைந்து, அணையின் நீா்மட்டம் சரிந்தது. நீா் வெளியேற்றத்தைவிட, வரத்து குறைவாக உள்ளதால் இனிவரும் நாள்களில் அணையின் நீா்மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணை நிலவரம்: சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 56.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,255 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், அணையிலிருந்து 1,569 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீா்இருப்பு 3,046 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT