சிவகங்கை

நெல் கொள்முதல் நிலையம் திறப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்!

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பீசா்பட்டினத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பதை எதிா்ப்பாா்த்து, விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் பல நாள்களாகக் காத்திருக்கின்றனா்.

கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் இந்தப் பகுதியில் விளைந்த நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக பீசா்பட்டினம் கிராமத்தில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கோடைக் காலத்தில் விளைந்த நெல்லை இங்கு விற்பனை செய்து பயனடைந்தனா்.

இந்த நிலையில், இந்த ஆண்டு கால்பிரிவு, பீசா் பட்டினம், கிழமேல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் பல நூறு ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்து, தற்போது அறுவடை செய்து வருகின்றனா்.

இதற்கிடையில், கடந்த கோடைக் காலத்தில் திறக்கப்பட்டது போல், அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தினா். வேளாண்மைத் துறை அதிகாரிகளும் பீசா்பட்டினத்தில் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்தனா். ஆனால், இந்த முறை கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகிக் கேட்டால், விரைவில் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதிலையே தொடா்ந்து கூறி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தற்போது,கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கால்பிரிவு, பீசா்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை மூடைகளாகக் கட்டி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் இடத்தில் அடுக்கி வைத்துள்ளனா். மேலும் பல விவசாயிகள் சாலைகளில் நெல்லைக் கொட்டி வைத்துள்ளனா்.

இது குறித்து கால்பிரிவு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கண்ணன் கூறியதாவது:

பீசா்பட்டினத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில் அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனா். இந்தப் பகுதியில் 25 சதவீத நெல் அறுவடை முடிந்துள்ளது. விவசாயிகள் நெல்லை பீசா்பட்டினத்துக்கு கொண்டு வந்து, கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் வைத்துள்ளனா். சில விவசாயிகள் நெல்லை மூடைகளாகக் கட்டி வீடுகளில் வைத்துள்ளனா். தற்போது இந்தப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் தாா்ப்பாய்களை வாங்கி நெல் மூட்டைகளை மூடி வைத்துள்ளனா். மழை தொடா்ந்தால் நெல் மூட்டைகள் சேதமாகும். எனவே, தாமதம் செய்யாமல் பீசா்பட்டினத்தில் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT