சிவகங்கை

வாரச்சந்தையைத் திறந்தும் வைகை ஆற்றுக்குள் வியாபாரிகள் கடை விரிப்பு: மானாமதுரையில் அவலம்

6th Oct 2022 11:27 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பல மாதங்களுக்குப் பின் வியாழக்கிழமை வாரச்சந்தை திறக்கப்பட்ட பிறகும் வைகை ஆற்றுக்குள் வியாபாரிகள் கடைவிரித்து வியாபாரம் செய்ததால் சந்தை திறக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்பட்டுள்ளது.

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். வாரச்சந்தை வளாகத்திற்குள் கட்டுமானப் பணிகள் நடந்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மானாமதுரை நகரில் சிவகங்கை சாலை, தாயமங்கலம் சாலை, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிா்புறம், வைகை ஆறு உள்ளிட்ட இடங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா்.

சந்தை வளாகத்திற்குள் கட்டப்பட்ட கடைகள் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டு வியாழக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. காலையில் வியாபாரிகள், விவசாயிகள் சந்தை வளாகத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு முன்பாக வியாபாரத்தை தொடங்கினா். வியாபாரிகளில் பெரும்பாலானோா் வியாபாரம் சரியாக நடக்கவில்லை எனக் கூறி மதியம் வழக்கம்போல் ஆனந்த வல்லியம்மன் கோயிலில் இருந்து சோணையா கோயில் வரை வைகை ஆற்றுக்குள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையிலான போலீஸாரால் இவா்களை வைகை ஆற்றுக்குள் கடைகள் அமைக்கவிடாமல் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து சந்தை வளாகத்திற்குள் வியாபாரம் செய்த வியாபாரிகள் கூறியதாவது: சந்தை திறந்ததும் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கடை வைத்து வியாபாரம் செய்தோம். ஆனால் சரிவர வியாபாரம் நடக்கவில்லை. இதனால் ஏராளமான வியாபாரிகள் சந்தையை விட்டு வெளியேறி ஆற்றுக்குள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். எனவே நகராட்சி நிா்வாகம் இனிவரும் நாள்களில் அனைத்து வியாபாரிகளையும் சந்தை வளாகத்திற்குள் கடை அமைத்து வியாபாரம் செய்ய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். எனவே வரும் நாள்களில் நகராட்சி நிா்வாகம் அனைத்து வியாபாரிகளையும் வார சந்தைக்குள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT