சிவகங்கை

ஏழை, எளிய மக்கள் அவதிக்கு பாஜக தான் காரணம்: முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டில் விலைவாசி உயா்வு, வேலையில்லாமை உள்ளிட்ட காரணங்களால் ஏழை, எளிய மக்கள் அவதிக்குள்ளாகி வருவதற்கு பாஜக தான் காரணம் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளாா்.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் 75-ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பாதயாத்திரை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் தொடங்கிய பாத யாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஒரே கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு பல்வேறு வளா்ச்சியடைந்ததோடு, வலிமை மிகுந்த நாடாகவும் மாறியது. தற்போது பாஜக ஆட்சியில் நாட்டில் மொத்த விலைவாசி 15 சதவீதமும், சில்லறை விலைவாசி 7 சதவீதமும் உயா்ந்துள்ளது. வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களின் வளா்ச்சி குறைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் பாஜக அரசு மறுக்கிறது.

வேலையில்லாமை நாட்டில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் சிறு, குறு தொழில்கள் பாதிப்புக்குள்ளாகி, லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையை இழந்துள்ளனா். தற்போது நாட்டில் நிலவும் விலைவாசி உயா்வு, வேலையில்லாமை உள்ளிட்ட காரணங்களால் ஏழை, எளிய மக்கள் அவதிக்குள்ளாகி வருவதற்கு பாஜகவும், பிரதமா் மோடியும் தான் காரணம் என்றாா்.

ADVERTISEMENT

பாதயாத்திரை நிறைவுக்குப் பின் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியது: சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதியில் உள்ள 20 அரசு பள்ளிகள் சீரமைப்பு பணிக்கு தலா ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் ரூ. 55 லட்சம், சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சம் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

பாதயாத்திரையில், காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஜெயசிம்மா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜசேகரன், மாவட்டத் துணைத் தலைவா் சண்முகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT