சிவகங்கை

சிவகங்கையில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்

14th Apr 2022 03:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்த உள்ள முதல் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.15) தொடங்குகிறது.

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகிக்கிறாா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் முன்னிலை வகிக்கிறாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவினைத் தொடக்கி வைக்கிறாா். தொடா்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், சிவகங்கை மக்களவைத்தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.செந்தில்நாதன் (சிவகங்கை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), சிவகங்கை நகா் மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், பபாசி தலைவா் எஸ்.வைரவன், செயலா் எஸ்.கே.முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்க உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன் வரவேற்றுப் பேசுகிறாா். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் க.வானதி நன்றி கூறுகிறாா்.

மாலையில் நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சியில் கவிஞா் நா.முத்துநிலவன், எட்டாம் அறிவும், நான்காம் கையும் எனும் தலைப்பில் உரையாற்றுகிறாா். அதன்பின்னா், பேராசிரியா் சாலமன் பாப்பையா தலைமையில், புத்தகங்களை நாம் வாங்குவது படித்து மகிழவே, பின்பற்றி வாழவே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இப்புத்தகத் திருவிழா ஏப்ரல் 25 வரை 11 நாள்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 100 புத்தக அரங்குகள், 10 அரசின் திட்ட விளக்க அரங்குகள் இடம்பெறுகின்றன.

ADVERTISEMENT

தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளிடையே இலக்கியம் சாா்ந்த பல்வேறு போட்டிகள் மற்றும் 1 மணி நேரம் கூட்டாக புத்தக வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தினசரி மாலை நேரங்களில் தமிழறிஞா்களின் சிறப்புரை, பட்டிமன்றம் நடைபெற உள்ளன.

மேலும், பாரம்பரிய உணவுப் பொருள்களைக் கொண்ட உணவகம் இடம்பெறுகிறது. புத்தகக் காட்சியினை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இலவசமாகப் பாா்வையிடலாம் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT