சிவகங்கை

தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை: ப. சிதம்பரம் 

14th Jun 2021 12:59 PM

ADVERTISEMENT

தமிழக அரசு மதுக்கடைகளைத் திறந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதுப்பொலிவுடன் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் அலுவலகத்தை திங்கள்கிழமை அவர் திறந்து வைத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ். மாங்குடியை அலுவலக இருக்கையில் அமரவைத்து வாழ்த்துக்கள் தெரிவித்த ப. சிதம்பரம் அலுவலகம் முன்பு மரக்கன்று நட்டுவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது அருந்தும் பழக்கம் எனக்கு கிடையாது. மது அருந்துபவர்கள் எல்லாம் தீயவர்கள் என்று சொல்லமுடியாது. மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரை மதுக்கடைகள் இருக்கும். மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் தான் பெருகும். இதனை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே உலகம் முழுவதும் என்ன நெறிகளை பின் பற்றுகிறார்கள் என்றால் மதுக்கடைகள் திறந்திருக்கும் அதே நேரத்தில் மது அருந்தக்கூடாது என்ற பிரசாரம் செய்கிறார்கள். கல்வி புகட்டுகிறார்கள், அறிவுரை வழங்குகிறார்கள். சிகரெட் புகை பிடித்தால் புற்றுநோய் வரும் என்று பிரசாரம் செய்ததால் புகை பிடிக்கும் பழக்கம் கனிசமாக குறைந்துவிட்டது.

ADVERTISEMENT

அதுபோல் மது அருந்தக்கூடாது என்று பிரசாரம் செய்யலாமே ஒழிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றால் கள்ளச்சாராயம் தான் பெருகும். மதுக்கடைகள்  விசயத்தில் தமிழ்நாடு அரசுக்கு வேறு வழிகள் இருப்பதாக எனக்கு தெரிவில்லை. மதுக்கடைகள் திறந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் என்ன செய்வது?.

மது பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நிறைய பணத்தை செலவழித்து தமிழக அரசு பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அறிவுரை வழங்க வேண்டும். அதுதான் வழியே தவிர மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.

பாஜகவினர் தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை மூடச்சொல்லிவிட்டு பின்னர் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடச்சொல்லலாம். கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வுக்கு பெட்ரோல், டிசல் விலை உயர்வு தான் காரணம் என்றார்.

விழாவில் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி, காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏவும் காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவருமான கேஆர். ராமசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
 

Tags : Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT