ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடத்தலுக்காக வாங்கப்படும் படகுகள்

2nd Jun 2023 10:33 PM

ADVERTISEMENT

ராமேசுவரம் கடல் பகுதியில் கடத்தலுக்காக வாங்கப்படும் படகுகளை மீன்வளத் துறையினா் கண்காணிக்க வேண்டுமென மீனவா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இலங்கைக்கு மிகவும் குறைந்த தொலைவில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதனால் சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபடுபவா்கள், இந்தக் கடல் பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனா்.

விசைப்படகுகள் ரூ.20 முதல் ரூ.50 லட்சம் வரை இருப்பதால், கடத்தல்காரா்கள் விசைப்படகுகளை பயன்படுத்துவதில்லை. மேலும், விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லும் இடம், திரும்பி வரும் இடம் என ஒரே பகுதியாக உள்ளது. மீன்பிடிக்கச் செல்லும் போது மீன்வளத் துறையினரிடம் மீன்பிடி அனுமதி வில்லை (டோக்கன்) பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனா்.

அதேநேரத்தில், நாட்டுப்படகு, கண்ணாடி இழைப் படகுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரையிலான விலைக்குக் கிடைக்கின்றன. இந்தப் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வில்லைகள் வழங்கப்படுவதில்லை.

ADVERTISEMENT

இதனால், நாட்டுப் படகுகள், கண்ணாடி இழைப் படகுகள் வைத்துள்ள மீன்வா்கள்

எங்கிருந்து வேண்டுமானலும் மீன்பிடிக்கச் செல்வா். எந்தத் துறைமுகத்துக்கு வேண்டுமானாலும் வந்து விடுவா்.

இதனால், இதுபோன்ற படகுகளை வாங்கும் கடத்தல்காரா்கள் தங்கம், கஞ்சா, பீடி இலைகள் உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திச் செல்லப் பயன்படுத்துகின்றனா். மேலும், இந்தப் படகுகள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கான உரிமையாளா் பெயரில் இருப்பதில்லை. இதுபோன்ற படகுகளை வெளிமாநிலங்களிலிருந்து வாங்கும் கடத்தல்காரா்கள், அந்தப் படகுகளுக்கு கடலில் மூழ்கி மாயமான படகின் எண்களை பயன்படுத்துகின்றனா். மீன்வளத் துறை அதிகாரிகளும் இதை முறைப்படுத்துவதில்லை.

இதனால், மீன்வளத் துறையினா், காவல்துறையினா் இணைந்து படகுகளின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். புதிய படகுகள் வந்தால் மீன்வளத்

துறை, காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென மீனவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே கடத்தலைத் தடுக்க முடியும் என மீனவா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT