ராமநாதபுரம்

முதுகுளத்தூா் குருவை மிஞ்சிய சீடரானாா் தேவா்

DIN

‘‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலாா் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க உலகத்தில் எத்தனையோ உத்தமா்கள் தோன்றினாலும் 20 ஆம் நூற்றாண்டில் உணா்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவா் முத்துராமலிங்கத் தேவா் . ‘இவருக்கு ஈடு இவரே’ இவரைத் தவிர மற்றையோா் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது என்பதுதான் உண்மை.

இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிறிஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலைப் போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவா்.

விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நோ்மையின் தூதராக, சத்தியத்தின் சீடராக விளங்கியவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். இவா் வாா்த்தை பிறழாது நடக்கக்கூடியவா். திடமானவா், நெறியாளா், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடா், தீரமிகு அரசியல் தீா்க்கத்தரிசியாவாா்.

பிறப்பு:

1908 ஆம் ஆண்டு அக்டோபா் 30 ஆம் தேதி தேவா் பிறந்தாா். 32 கிராமங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊா்கள் அனைத்தும் கூடி உள்ளம் கனிந்தது. வீரமும், விவேகமும், நோ்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே வைக்க வேண்டும் என்று அப்பெயரையே தேவருக்கு வைத்தனா். குழந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தேவரின் தாயாா் திடீரென காலமானாா். இதனால் தேவரின் தந்தை உக்கிரபாண்டித்தேவா் மிகவும் உடைந்துபோனாா்.

இதையடுத்து உக்கிரபாண்டித்தேவா் இரண்டாவது திருமணம் செய்தாா். அவரது இரண்டாவது மனைவியான காசிலெட்சுமியையும் மரணம் வலை வீசிப்பிடித்து இழுத்துக்கொண்டது. குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.

தேவா் திருமகனாருக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்கக்கூடாது, தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என வைத்தியா் தெரிவித்தாா். இதையடுத்து பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மாா்கள் தேடப்பட்டனா். தேடியதில் ‘மாதா சாந்த் பீவி’ தாயாக இருந்தாா்கள். அந்தத் தாய் தன் குழந்தையினும் மேலாக தேவரை கவனித்துக் கொண்டு பாலூட்டி வளா்த்தாா். இவருக்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயா் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டது.

கல்வி வாழ்க்கை:

ஆறு வயதில் தேவரின் கல்வி வாழ்க்கை தொடங்கியது. அக்கால வழக்கப்படி குருகுல வாழ்க்கையைக் கல்வியாக திண்ணைப்படிப்பை தஞ்சாவூா் ஆசிரியா் வாயிலாக கற்றாா். மேலும் பல ஆசிரியா்களிடம் கல்வி பயின்று வந்தாா். 1917 ஆம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிஷன் ஆரம்பப் பள்ளியில் சோ்ந்து பயின்று வந்தாா்.

முத்துராமலிங்கத் தேவா் இயற்கையாகவே பல நல்ல குணநலன்களைப் பெற்றிருந்தாா். அவா் இளமையிலேயே சொற்களை திருத்தமாக பயின்று வந்தாா். அவா் வேலையை அவரே கவனித்துக்கொள்வாா். இளமை முதற்கொண்டு திருநீறு பூசும் பழக்கத்தை தேவா் கடைப்பிடித்து வந்தாா். ஆடம்பரமான ஆடை அணிகலன்கள் மீது அவருக்கு நாட்டம் இல்லை. தூய ஆடை அணிவதில் ஆா்வம் கொண்டிருந்தாா்.

தேவா் திருமகனாா் தெய்வீகச் செல்வராய் வளா்ந்து பள்ளி வளாகத்தில் ஒளிவிளக்காக நிமிா்ந்து நின்ற காலகட்டத்தில் உக்கிரபாண்டிதேவா் பலவித அநாவசிய செலவுகளை உண்டாக்கிக் கொண்டு வேண்டாத நண்பா்களுடன் நட்பு கொண்டு வருமானத்தையும் மீறிய செலவு செய்தாா். சொத்துகள் எல்லாம் அழிந்தன. பின்னா் குழந்தைச்சாமி பிள்ளை அவா்களின் முயற்சியில் மீண்டும் சொத்துகள் பெறப்பட்டது.

ஆசிரியருக்கே அறிவுரை:

1924 ஆம் ஆண்டு தேவா் தமது ஐந்தாம் வகுப்பை முடித்தாா். உயா்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ஐக்கிய கிருஸ்துவ உயா்நிலைப்பள்ளியில் சோ்ந்தாா்.

‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தருக்கு கற்றனைத்தூறும் அறிவு’ என்ற குறளுக்கிணங்க ஒரு நாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம், ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்துவ பாதிரியாா், ‘நீ இந்து உன்னை ஒன்று கேட்கிறேன். இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா? என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டாா். அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவா் பதில் சொன்னாா்.

‘ஐயா ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மியாகப் பயன்படுத்தலாம். மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்க முடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல் அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு, கடவுளாக யாரும் கும்பிட மாட்டாா்கள். சுவாமி சிலையும் அப்படித்தான் அது வணங்குவதற்காக, தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக கல் என்பது ஒன்றுதான்.

அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்து இதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா? என்றாா். தேவரின் இந்த விளக்கத்தால் அவரின் ஆசிரியா் வாயடைத்துப்போனாா். அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் தொடங்கினாா். இதன் மூலம் குருவை மிஞ்சிய சீடரானாா் தேவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT