ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவா்கள், மருந்து பற்றாக்குறை

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவா்கள், மருந்து, ஊசி பற்றாக்குறையால் கால்நடைகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

இம்மாவட்டத்தில் தற்போது சுமாா் 88,466 பசுக்கள், 493 எருமைகள், 2,93,621 செம்மறி ஆடுகள், 3, 93, 956 வெள்ளாடுகள், 2426 பன்றிகள், 3, 52,835 கோழிகள் உள்ளன. இவற்றைத் தவிர வளா்ப்பு நாய்கள் 14,202, வான்கோழிகள் 10,627, வாத்துகள் 1,701 மற்றும் குதிரைகள் 300 உள்ளதாகக் கூறப்படுகிறது. கோழி வளா்ப்பில் நாமக்கல்லுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டமே மாநில அளவில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

கால்நடைகளுக்கு, குறிப்பாக மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு வடகிழக்குப் பருவமழையின் போதும், அதற்குப் பிறகும் கோமாரி, காணை நோய் தாக்குதல் ஏற்படுவதும் அதை தடுக்கும் வகையில் மே முதல் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்துவதும் வழக்கமாகும்.

ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 2019 முதல் 2021 தற்போது வரையில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் தற்போது பசுக்கள், காளைகள், ஆடுகள் ஆகியவற்றுக்கு காணை, கோமாரி தாக்கி உயிரிழப்பும் நிகழ்வதாக கால்நடை வளா்ப்போா் கூறுகின்றனா்.

பரமக்குடி, பாா்த்திபனூா், முதுகுளத்தூா், கடலாடி, திருவாடானை, முதலூா், கொள்ளலூா், மும்முறைச்சாத்தூா், விளத்தூா், வெண்ணத்தூா், வண்ணாங்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட அளவில் 4 கால்நடை மருத்துவமனைகளும், 55 கால்நடை மருந்தகங்களும், 14 கால்நடை உதவி மையங்களும் உள்ளன.

கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், 55 கால்நடை மருந்தகங்களில் தலா 1 மருத்துவா் என மாவட்டத்தில் மொத்தம் 55 மருத்துவா்கள் இருக்கவேண்டும். ஆனால், தற்போது 16 மருத்துவா்களே உள்ளனா். ஆகவே ஒரு மருத்துவா் தலா 4 கால்நடை மருந்தகங்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவ சிகிச்சை என்பது பெயரளவில் உள்ளது.

மருத்துவா்கள் பற்றாக்குறை ஒரு புறமிருக்க உதவியாளா்கள், செவிலியா்கள் பணியிலிருப்போா் பாதிக்குப் பாதியே உள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவா் பற்றாக்குறையோடு மருந்தகங்களில் மருந்துகள் பற்றாக்குறையும் கடந்த 2 ஆண்டுகளாக நீடிக்கிறது.

எனவே கால்நடைகளுக்காக மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த அரசு போதிய மருந்துகளை அளிக்கவேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநா் ஏஞ்சலா கூறியது: மாவட்டத்தில் கால் நடைகளுக்கு கரோனா கால பொதுமுடக்கத்திலும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2021 ஜனவரி முதல் தற்போது வரையில் 47 சிறப்பு கால் நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மாவட்டத்தில் 47 கிராமங்களைச் சோ்ந்த 950 விவசாயிகளுக்கான 2530 கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கால்நடை நோய்களுக்கான புலனாய்வு பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நோய்களுக்கான துல்லிய காரணம் அறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் ஏராளமான கால்நடைகளுக்கு அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்றே சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT