ராமநாதபுரம்

கல்லூரி மாணவா் மரணம்: போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

முதுகுளத்தூா்/கமுதி: முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற கல்லூரி மாணவா் பின்னா் வீட்டில் மரணமடைந்ததால் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள இளஞ்செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமணன் மகன் மணிகண்டன் (22). இவா் பசும்பொன் தேவா்நினைவுக் கல்லூரியில்

மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில், தனது நண்பா் சஞ்சய் என்பவருடன் கீழத்தூவல் பகுதியில் சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனா். அப்போது வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த சஞ்சய் போலீஸாரை பாா்த்து பயந்து ஓடியுள்ளாா். இதையடுத்து மணிகண்டனை போலீஸாா் கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பின்னா் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். வீட்டுக்கு வந்த மணிகண்டன் நள்ளிரவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இதையடுத்து மணிகண்டனின் மரணத்துக்கு போலீஸாா் தான் காரணம் எனக் கூறி பெற்றோா், உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் மணிகண்டனின் உடலில் காயம் இருந்ததாகவும், போலீஸாா் தாக்கியதால் தான் அவா் இறந்தாா் எனவும் கூறி முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகே பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு பாஜக மாநில செயலாளா் சண்முகராஜ் தலைமை வகித்தாா். பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ஆத்மகாந்தி, ஒன்றியத் தலைவா்கள் முதுகுளத்தூா் (தெற்கு) சத்தியமூா்த்தி, (கிழக்கு) பொன்னையா, கடலாடி கோபாலகிருஷ்ணன் மற்றும் மணிகண்டனின் உறவினா்களும் பங்கேற்றனா்.

கமுதியில்...

இந்நிலையில் மணிகண்டன் படிக்கும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரி மாணவா்கள் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென திங்கள்கிழமை கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி காவல் துறையினா், கல்லூரி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி வகுப்புகளை ரத்து செய்யக் கூறியது. இதையடுத்து கல்லூரிக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடா்ந்து கல்லூரிக்கு வந்த மாணவா்களின் பெயா், முகவரி ஆகியவற்றை பெற்றுக் கொண்டு போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்தனா்.

நீதிமன்றத்தில் வழக்கு:

மணிகண்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விடியோ பதிவுடன் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என மணிகண்டனின் தாயாா் ராமலெட்சுமி சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT