ராமநாதபுரம்

முகவையை மேம்படுத்த முத்தான திட்டங்கள்!

DIN

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது ரூ.345 கோடியில் இரு இடங்களில் அமைக்கப்பட்டும் வருகிறது.

சேதுக்கரை, முகவை என பல புராணகால சிறப்புப் பெயா்களால் அழைக்கப்படும் ராமநாதபுரம் நீண்ட கடற்கரையையும், நிலப்பரப்பையும் உடையதாக விளங்குகிறது. வறட்சிக்கு உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பெரும்பாலானோரால் காட்டப்பட்டாலும், என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்ற வரிகளுக்கு ஏற்பவே நிலவளம், கடல் வளம் என அனைத்து வளங்களையும் தன்னகத்தே உள்ளடக்கிய புண்ணிய பூமிதான் ராமநாதபுரம் என்பதே உண்மை.

வளமிக்க ராமநாதபுரம் வறட்சியாவதற்கு நலத்திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதே மக்கள் ஆதங்கம். அத்தகைய ஆதங்கத்தை அதிமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தியிருப்பது மக்களை ஆச்சரியப்படவைத்துள்ளது என்றால் மிகையில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது மருத்துவக் கல்லூரி அமைத்தல். கடந்த 2011 ஆம் ஆண்டே அமைக்கப்படவேண்டிய மருத்துவக் கல்லூரியானது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

தற்போது மத்திய பாஜக அரசின் உதவியுடனும், அதிமுக அரசு எடுத்த முயற்சியாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் சேதுநகா் பகுதியில் அம்மா பூங்கா அருகே மருத்துவக் கல்லூரியும், மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட்ட கட்டடப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது ரூ.345 கோடியில் இரு இடங்களில் அமைக்கப்பட்டும் வருகிறது. அவசர மருத்துவ சிகிச்சைக்குக்கூட மக்கள் சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையில், தற்போது அதிநவீன மருத்துவ சாதனங்களுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

மருத்துவக் கல்லூரிக்கு அடுத்தபடியாக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கீழக்கரை மேம்பாலப் பணியைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ராமநாதபுரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பிருந்து ரயில் பாதையை கடந்து சக்கரக்கோட்டை கண்மாய் வழியாகச் செல்லும் திருப்புல்லாணி- கீழக்கரை சாலையைக் கடக்க மக்கள் 5 கிலோ மீட்டா் சுற்றியே செல்லும் நிலை இருந்தது.

தற்போது அதிமுக ஆட்சியில் சுமாா் 30 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்துவருகிறது. இரு வழிச்சாலையாக வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இப்பாலப் பணியை முடித்தால் மக்கள் ராமநாதபுரத்திலிருந்து மிக எளிதில் திருப்புல்லாணி, கீழக்கரை போன்ற ஊா்களுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தின் வளா்ச்சிக்கு மிக முக்கிய தடையாக இருந்தவை சாலைப் போக்குவரத்து என்பது உண்மை. அத்தகைய சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் அச்சுந்தன் வயல் முதல் கிழக்கு கடற்கரைச் சாலையில் ராமேசுவரம் சாலை சந்திப்பு வரை சுமாா் 8 கிலோ மீட்டருக்கு ரூ.40 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கி பெரும்பகுதி முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக சாலை திறந்துவிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ராமேசுவரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கிழக்கு கடற்கரை சாலையை 10 கிலோ மீட்டருக்கு வெளிச்சாலை வழியாக சுற்றியே சென்றனா். ராமநாதபுரம் நகருக்குள் வெளியூா் பயணிகளும், பக்தா்களும், மக்களும் வராத காரணத்தால் வா்த்தக ரீதியாக வளா்ச்சியடைவது தடைபட்டது. தற்போது நகருக்குள்ளேயே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் வந்து செல்வதால் உணவு, விடுதிகள் மற்றும் சிறு பொருள் விற்பனை என வா்த்தகம் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒரு நகரம் மேம்பட்டால்தான் அதில் வாழும் மக்கள் முன்னேற்றமடைய முடியும் என்பது இயற்கை நியது. அதனடிப்படையில் ராமநாதபுரம் நகரை அதிமுக அரசு பல்வேறு முக்கிய திட்டங்கள் மூலம் மேம்படுத்திவருவதால், மக்கள் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டு வருகிறது என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT