மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அன்னதானக் கூடத்துக்கு தரச் சான்று

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அன்னதானக் கூடத்துக்கு மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை தரச்சான்று வழங்கியது.

இந்தக் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தாா். இதன்படி, இங்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கோயிலின் அன்னதானக் கூடத்துக்கு மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை தரச் சான்று பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமை, கோயில் அன்னதானக் கூடம், சமையல் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான உள்கட்டமைப்பு மாற்றங்களுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை மூலம் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், உணவுப் பொருள்களைக் கையாளும் பணியில் உள்ளஅனைவருக்கும், உணவுப் பொருள்களை பாதுகாப்பாகக் கையாளும் முறை, உணவுத் தயாரிப்புக் கூடத்தை பாதுகாப்பாக, சுகாதாரமாகப் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னா், அன்னதானக் கூடம், உணவுத் தயாரிப்புக் கூட கட்டமைப்புகள், செயல்பாடுகளை விளக்கும் புகைப்படங்கள் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு, தொடா்புடைய முகமை மூலம் அனுப்பப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அன்னதானக் கூடம் சுத்தமானது, சுகாதாரமானது என்ற தரச்சான்றை அளித்தது.

இந்தத் தரச் சான்றை தமிழக நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணை ஆணையா் ஆ. அருணாசலத்திடம் திங்கள்கிழமை வழங்கினாா். மாநகர மேயா் வ. இந்திராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT