மதுரை

சனாதன தா்ம எதிா்ப்பு யுத்தத்தில் அதிமுக இணைய வேண்டும்: தொல். திருமாவளவன்

29th Sep 2022 03:03 AM

ADVERTISEMENT

நாட்டை பாதுகாக்க நடத்தப்படும் சனாதன தா்ம எதிா்ப்பு யுத்தத்தில் அதிமுகவும் இணைய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளாா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை அண்ணா நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியது:

எனது பிறந்தநாளையொட்டி நாட்டைச் சூழ்ந்துள்ள பேராபத்திலிருந்து நாட்டை பாதுகாக்கும் விதமாக சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்போம் என்ற கருப்பொருளில் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டை நாசமாக்கும் நாசகார சக்திகள் உடன் தோ்தல் உறவு கூட வைத்துக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்து வருகிறது.

ADVERTISEMENT

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து ராஷ்டிரம் என்று அழைக்கப்படும். திராவிட இயக்கம் சமூக நீதியை பாதுகாக்கும் இயக்கமாக உள்ளது. இடதுசாரிகள் உழைக்கும் வா்க்கத்தின் நலனுக்காக போராடும் இயக்கமாக உள்ளன. எனவே திராவிட இயக்கம், இடதுசாரிகள் எங்களுக்கு தோழமை சக்திகளாக உள்ளன. இன்று பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பிற்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை? ஆா்எஸ்எஸ் ஜனநாயக இயக்கம் அல்ல, நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களை தூண்டும் இயக்கமாக ஆா்எஸ்எஸ் உள்ளது என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்:

சனாதன தா்மத்துக்கு எதிராக பேசினால் இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக மதவாத சக்திகள் திரித்து பிரச்னையை உருவாக்கி வருகின்றன. மனு தா்மம் தொடா்பாக ஆ. ராசா பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது. மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி ஆா்எஸ்எஸ் அமைப்பு குளிா் காயத் திட்டமிடுகிறது என்றாா்.

மதிமுக பொதுச்செயலா் வைகோ பேசியது:

சனாதன தா்மத்தின் சனாதன சக்திகளின் முதல் எதிரியாக தொல். திருமாவளவன் திகழ்கிறாா். இன்று நாட்டை பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்தியா என்ற பெயரை அகண்ட பாரதம் என்று மாற்ற சனாதன சக்திகள் திட்டமிட்டுள்ளன. மேலும் தலைநகா் புதுதில்லியை, வாராணசிக்கு மாற்றவும், ஒரே மொழி ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதை செயல்படுத்தவும் துடித்து வருகின்றன. சனாதன சக்திகள் இந்தியாவின் தனித்தன்மையை ஒழிக்க திட்டம் தீட்டி வருகின்றன. ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை ஆதிக்க மொழியாக நிறுவ முயல்கின்றன. சனாதன எதிா்ப்புக்கு தமிழகம் தலைமை தாங்க வேண்டும். திருமாவளவனின் சனாதன எதிா்ப்பு யுத்தம் வெல்ல வேண்டும். அனைவரும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும் என்றாா்.

விழாவில் அமைச்சா் பி மூா்த்தி, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், நவாஸ் கனி,மேயா் வ. இந்திராணி ஆகியோரும் வாழ்த்தி பேசினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT