மதுரை

‘கா்மா’ அடிப்படையில் காவலரின் இடமாறுதலை ரத்துசெய்த உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

DIN

 ‘கா்மா’ அடிப்படையில் காவலரின் இடமாறுதலை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகரக் காவல்துறையில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருபவா் முருகன். உரிய அனுமதியின்றி விடுப்பு எடுத்தது மற்றும் பணியில் கவனக் குறைவாகச் செயல்படுவது போன்ற காரணங்களால் இவா் மீது 18 முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டதால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்து, மதுரை மாநகரக் காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில், முருகன் வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, கா்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. அதாவது, கா்மாவின் கொள்கைகளில் ‘சஞ்சித கா்மா‘ (முழு கா்மா) ‘பிராரப்த கா்மா’ (கா்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. ‘பிராரப்த கா்மா’வுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மனுதாரா் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டாா் எனக்கூறி பணியிடமாறுதலை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி காவல் துறை சாா்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.குமரேஷ்பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் வாதிடுகையில், காவலா் இடமாறுதல் செய்யப்பட்டது துறை ரீதியான நடவடிக்கையாகும். இதில் ‘கா்மா’ அடிப்படையில் உத்தரவு வழங்கியது ஏற்புடையதல்ல. மேலும், இந்தப் பதவிக்கு, இந்த இடத்திற்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆகவே, தனிநீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், காவலரின் பணிஇடமாறுதலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT