மதுரை

மதுரையில் உரிய ஆவணமின்றி வளா்க்கப்பட்ட யானை பறிமுதல்: மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வளா்க்கப்பட்டு வந்த யானையை வனத் துறையினா் மீட்டு, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுசென்றனா்.

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மாலா. இவா் தனது வீட்டில் ருபாலி என்ற பெண் யானை ஒன்றை வளா்த்து வந்தாா். இந்த யானையை கோயில் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு வாடகைக்கு அனுப்பி வந்தாா்.

இந்நிலையில், இந்த யானையை வளா்ப்பதற்கு உரிய அனுமதி எதுவும் பெறப்படவில்லை என, வனத்துறைக்கு புகாா் எழுந்துள்ளது. அதன்பேரில், வனத் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா். அதில், யானை பிகாரில் இருந்து வாங்கி வரப்பட்டதாகவும், அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததும் தெரியவந்தது.

எனவே, யானையை பறிமுதல் செய்து, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க, வனத்துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட வன அலுவலா் குருசாமி தலைமையில், வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவா்கள் உள்பட 30 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை இரவு தல்லாகுளத்துக்குச் சென்று யானையை பறிமுதல் செய்ய முயன்றனா். அப்போது, யானையின் உரிமையாளா் உள்ளிட்டோா் யானையை கொண்டு செல்லவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், யானையின் பாகனும் அங்கிருந்து தலைமறைவானாா்.

ADVERTISEMENT

இதனால், போலீஸாா் வரவழைக்கப்பட்டு யானையின் உரிமையாளருடன் பேச்சுவாா்த்தை நடத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், பாகன் இல்லாததால் யானையும் ஒத்துழைக்க மறுத்தது. தொடா்ந்து, யானையை வழிநடத்திச் செல்ல மாற்றுப் பாகன் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை அதிகாலை யானையை லாரியில் ஏற்றிச் சென்று, திருச்சி மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT