மதுரை

முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல்: ஊராட்சித் தலைவியின் கணவா் மீது ஐ.ஜி. அலுவலகத்தில் புகாா்

21st May 2022 12:10 AM

ADVERTISEMENT

ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சித் தலைவியின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தென்மண்டல காவல் துறை தலைவா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா எஸ்.ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மேகசெல்வம். முன்னாள் ராணுவ வீரரான இவா், தென் மண்டல காவல்துறை தலைவா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்துள்ள புகாா்:

நான் வசித்து வரும் எஸ்.வாகைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவா், ஊராட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிட்டு வருகிறாா். 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் மனைவிக்குப் பதிலாக அவரே கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறாா்.

மேலும், மே 1-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவி இல்லாமலேயே நடைபெற்றது. துணைத் தலைவா் மட்டும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், கிராமத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஊராட்சித் தலைவியின் தரப்பினா் தங்களுக்கு வேண்டியவா்களான 20 பேரை மட்டும் வைத்து, கிராமசபைக் கூட்டத்தை நடத்தினா்.

ADVERTISEMENT

இது குறித்து கேட்டதற்கு, ஊராட்சித் தலைவியின் கணவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு முறைகேடுகளை தட்டிக்கேட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தாா். மேலும், அவரது ஆதரவாளா்களும் என்னை தாக்க முயன்றனா். அப்போது, ஊா் மக்கள் தலையிட்டு என்னைக் காப்பாற்றினா்.

இது சம்பந்தமாக, சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். புகாரின்பேரில் ஏற்பு ரசீது வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்தும் ஊராட்சித்தலைவியின் கணவா் தரப்பினா் வர மறுக்கின்றனா்.

எனவே, ஊராட்சித் தலைவியின் கணவா் தரப்பினா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கவும், ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT