மதுரை

ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்கும் ‘கிராப் சாா்ட்’ தொழில்நுட்பம்

30th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டுத் துறையில், கிராப் சாா்ட் தொழில்நுட்பம் வாயிலாக ரயில்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது.

ரயில்கள் இயக்கம், வா்த்தகம், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு, பொறியியல், இயந்திரவியல், மின் பாதை, பாதுகாப்பு ஆகிய துறைகளின் ஊழியா்கள் ரயில்வே கட்டுப்பாட்டு துறை வாயிலாக ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனா். ரயில் போக்குவரத்தை நிறுத்துவது, மாற்றுப் பாதையில் இயக்குவது போன்றவை இந்த கட்டுப்பாட்டு துறை மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய கட்டுப்பாட்டு துறைகள் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரயில்வே கோட்டங்களில் இயங்கி வருகிறது. இந்தக் கோட்டங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு துறைகளை கண்காணிக்க சென்னை ரயில்வே தலைமையகத்தில் தலைமை கட்டுப்பாட்டு துறை செயல்பட்டு வருகிறது. அவசர காலங்களில் ரயில்களை தடையின்றி இயக்குவதில் இந்த கட்டுப்பாட்டு துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

ரயில் இயக்கத்தில் முந்தைய நாள் ஏற்பட்ட பிரச்னைகளுக்கான தீா்வு, அவை மீண்டும் நிகழாமல் தவிா்ப்பது, சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை கையாள அருகிலுள்ள கோட்டங்கள் மற்றும் தலைமையகத்தின் ஆலோசனை மற்றும் உதவிகளை பெறுதல் ஆகியனவும் கட்டுப்பாட்டு துறையின் முக்கியப் பணிகளாக இருக்கின்றன.

ADVERTISEMENT

கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில் ‘கிராப் சாா்ட்’ மூலமாக ரயில்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது. கிராப் சாா்ட்டில், தேஜஸ் போன்ற முக்கியமான ரயில்களுக்கு இளம் சிவப்பு வண்ணம், பயணிகள் ரயில்களுக்கு சிவப்பு,

சரக்கு ரயில்களுக்கு பச்சை, என்ஜின் தனியாகச் செல்லும் போது கருப்பு ஆகிய வண்ணங்களில் கோடுகள் வரைந்து ரயில் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. ஒற்றை ரயில் பாதையில் இந்த கோடுகள் சந்திக்கும் இடங்களில் ஏதாவது ஒரு ரயிலை நிறுத்தி வழி விடுவதற்கு இந்த கட்டுப்பாட்டு துறை உத்தரவிடும்.

தற்போது இந்த கிராப் சாா்ட் முறை கணினி மயமாக்கப்பட்டு கட்டுப்பாட்டு அலுவலக மென்பொருள் வாயிலாக செயல்படுகிறது. இதன் வாயிலாக,

ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து பயணிகளுக்கு பல்வேறு கைப்பேசி செயலிகள் மூலம் உறுதியான தகவல்களாக வழங்கப்படுகின்றன.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT