மதுரை

மதுரை தயாரிப்புகளின் ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

DIN

மதுரை மல்லி, சுங்குடிச் சேலை, தென்னை நாா் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மடீட்சியா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம், மாவட்ட தொழில் மையம் ஆகியன இணைந்து இக் கூட்டத்தை நடத்தின. இதில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பேசியது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2020-2021-இல் தமிழகம் ரூ. 1.93 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்கள் உற்பத்தி துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை உற்பத்தி நிறுவனங்களில் 95 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உள்ளன. மதுரையின் தொழில் வளா்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், பெருநிறுவனங்களை முதலீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிப்காட் மையம் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் சாா்பில் மாவட்ட ஏற்றுமதி மையங்கள் அமைக்க முதல்கட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ள 75 மாவட்டங்களில் மதுரையும் இடம்பெற்றிருக்கிறது. புவிசாா் குறியீடு பெற்றுள்ள மல்லிகை மற்றும் கைத்தறி, ஆயத்த ஆடை, சுங்குடிச் சேலை, தென்னை நாா் பொருள்கள் ஆகியவற்றில் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவற்றின் ஏற்றுமதியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதி வணிகத்தைத் தொடருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசின் தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையா் கிரேஸ் லால்ரிண்டிக் பச்சாவ், மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகத்தின் இணைஇயக்குநா் டி.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பேசினா். மடீட்சியா தலைவா் சம்பத் மற்றும் ஏற்றுமதியாளா்கள், தொழில்முனைவோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT