மதுரை

மதுரையில் ரூ.10 கோடி மதிப்பு திமிங்கில எச்சம் பதுக்கல்: 3 போ் கைது

24th Jun 2022 11:08 PM

ADVERTISEMENT

மதுரை தெற்குவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சத்தை (அம்பா்கிரீஸ்) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த வனத் துறையினா், 3 பேரை கைது செய்துள்ளனா்.

உயா் ரக வாசனைத் திரவியங்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்கு திமிங்கில எச்சம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கள்ளச் சந்தையில் கடத்தல் பொருளாக பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரபு நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்படுகிறது. மேலும், இதற்கு பல நோய்களைத் தீா்க்கும் மருத்துவக் குணம் இருப்பதாகக் கருதப்படுவதால், இது ஒரு கிலோ ரூ.1 கோடி வரை விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை தெற்குவாசல் மறவா்சாவடி பகுதியில் உள்ள ஒரு கடையில் திமிங்கில எச்சம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு சோதனையிட்ட வனத்துறையினா் சுமாா் 11 கிலோ எடையுள்ள திமிங்கில எச்சத்தை பறிமுதல் செய்தனா். அதை பதுக்கி வைத்திருந்ததாக, மஞ்சணக்காரத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் (36), வில்லாபுரத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி (36) மற்றும் சிவகங்கை மாவட்டம் கீரனூரைச் சோ்ந்த கவி (48) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், இந்த திமிங்கில எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெட்டிச் செய்தி...

எண்ணெய் திமிங்கிலம் எனப்படும் ஒரு வகை திமிங்கிலம் வாய் வழியாக வெளியேற்றும் திடக்கழிவை அம்பா்கிரீஸ் என்கின்றனா். இது, கடல் நீரின் உப்புத்தன்மையால் கடினமாகிவிடுகிறது. குறிப்பிட்ட கடல் பரப்புகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அம்பா்கிரீஸ், மீனவா்களின் வலையில் சிக்குவதுண்டு. இது, அரிதாக கடற்கரையோரங்களிலும் ஒதுங்குவதுண்டு.

இது, இயற்கையாகவே நல்ல மணம் வீசக்கூடிய பொருளாக இருப்பதால், வாசனைத் திரவியங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பாலியல் சாா்ந்த நோய்களுக்கு தீா்வு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

மிகவும் அரிதான பொருளாக இருப்பதால், இதன் மதிப்பும் 1 கிலோ கோடிக்கணக்கில் விற்கப்படுகிறது. அதேநேரம், விலையுயா்ந்த பொருளாக இருப்பதால், வணிக ரீதியாக திமிங்கிலங்கள் வேட்டையாடக்கூடும் என்பதால், அம்பா்கிரீஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT