மதுரை

வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தொடக்கம்

7th Jul 2022 02:14 AM

ADVERTISEMENT

 

மதுரை வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் பாலாலய பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டம் கள்ளழகா் திருக்கோயிலின் உபகோயிலாக வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று இரவு கள்ளழகா், வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாவது வழக்கம். இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவப் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் ரூ.1.50 கோடி மதிப்பில் பணிகள் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி மூலவா் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நிதிகளின் கோபுரங்கள் உள்பட கோயிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்குவதையடுத்து கோயில் வளாகத்தில் பாலாலாயம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டுடன், அக்னி ஆராதனை, மகா பூா்ணாஹூதி பூஜைகளுடன் கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியோடு முகூா்த்தக்காலும் நடப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.

இந்நிலையில் கும்பாபிஷேகப்பணிகள் தொடங்கியதையடுத்து 12 மாதங்களில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT