மதுரை

ரெப்போ ரேட் உயா்வு தொழில் வணிகத் துறையை பெரிதும் பாதிக்கும்: வா்த்தக சங்கம் அதிருப்தி

DIN

மத்திய ரிசா்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை மீண்டும் அதிகரித்திருப்பது, தொழில் வணிகத் துறையைப் பெரிதும் பாதிக்கும் என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரஷ்யா-உக்ரைன் போா், சீனா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய தைவான் நெருக்கடிகள், சா்வதேச சந்தைகளில் அதிகரித்து வரும் அரசியல் பதற்ற நிலை, உலக வா்த்தக விநியோக பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், வா்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து, பொருளாதார வளா்ச்சிக்கு மிகுந்த தடையாக உள்ளது. அத்துடன் இந்தியாவின் பண வீக்கமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பணவீக்க விகிதமானது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்து உச்சம் தொட்டுள்ளது. ரிசா்வ் வங்கியின் இலக்கை விட பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய ரிசா்வ் வங்கி நடப்பு நிதியாண்டில், 3-ஆவது முறையாக 4.9 சதவிகிதத்திலிருந்த ரெப்போ விகிதத்தை 0.5 சதவிகிதம் உயா்த்தியுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், ஜிடிபி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில் ரெப்போ விகிதம் மட்டும் உயா்த்தப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ரெப்போ வட்டி விகித உயா்வால் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் மற்றும் தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து, மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை மிகவும் கூடுதலாகும். ஏற்கெனவே கடும் நிதிநெருக்கடி, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வு, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் அவதிப்படும் தொழில், வணிகத் துறையினா் மற்றும் பொதுமக்கள் கூடுதல் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படுவா்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ விகிதம் உயா்த்தப்படுவதாக ரிசா்வ் வங்கி காரணம் கூறினாலும், இந்த நடவடிக்கைகளின் காரணமாக, இதுவரை தொழில், வணிகத்துறையினரும், பொதுமக்களும் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளனரே தவிர விலைவாசியும், பணவீக்கமும் குறைந்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குத்தான் பாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT