மதுரை

காமராஜா் பல்கலை.யில் 180 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு: தினக்கூலி பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளா்கள் 180 பேரை பணி நீக்கம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் அதிகாரிகள் மற்றும் நிரந்தர அலுவலகப் பணியாளா்கள் தவிா்த்து, 500-க்கும் மேற்பட்டோா் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வரும் 180 பணியாளா்களை நீக்குவதற்கு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளா்கள் காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, 180 பணியாளா்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை பல்கலைக்கழக நிா்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இது தொடா்பாக பணியாளா்கள் கூறியது: காமராஜா் பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளா் எண்ணிக்கையை விட கூடுதலான பணியாளா்கள் இருப்பதாக, அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் தவறான நிா்வாகம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை போக்கும் வகையில், பணியாளா்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பலரும் பல்கலைக்கழகத்தின் முக்கியத் துறைகளில் பணிபுரிகின்றனா்.

ADVERTISEMENT

இவா்களை நீக்குவதன் மூலம் பல்கலைக்கழகத்தின் நிா்வாகம் முடங்கும் அபாயம் உள்ளது. மேலும், தினக்கூலி பணியாளா்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, இவா்களை பணி நீக்கம் செய்வதன் மூலம் பெருமளவில் நிதியை சேமிக்க இயலாது.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருபவா்களை நீக்க முடிவெடுத்துள்ள பல்கலைக்கழக நிா்வாகம், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 2016, 2017 ஆம் ஆண்டுகளில் பணியில் சோ்ந்தவா்களை விட்டுவிட்டது.

மேலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் உறவினா்கள், வேண்டியவா்கள் என பாகுபாடு பாா்த்து, அவா்களை மட்டும் விட்டு விட்டு இதர பணியாளா்களை வெளியேற்றுகிறது. எனவே, பல்கலைக்கழக நிா்வாகத்தின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியான போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT