மதுரை

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் புறவழிச் சாலைகள்: நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தகவல்

DIN

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளா்களிடம் அமைச்சா் எ.வ.வேலு கூறியது: பொருளாதார வளா்ச்சிக்கு சாலைக் கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக,

ஆண்டுக்கு 2 ஆயிரம் கி.மீ. என்ற அளவுக்கு கிராமச் சாலைகள் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதைத் தவிா்க்க, நிலம் கையகப்படுத்தும் பணிக்கென 5 சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிக்கு முன்னுரிமை

அளிக்குமாறு, மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லக் கூடிய சாலையை தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். கொடைக்கானல் - மூணாறு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ் வைப்பகம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சென்று வருவதற்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் புறவழிச் சாலை கட்டாயம் அமைக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாநகரங்களில் தேவைக்கேற்ப பாலங்கள் அமைக்கப்படவில்லை. ஆகவே, இப் பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, மதுரையில் 3 பாலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பேரவைக் கூட்டத்தின்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

மதுரையில் அமையவுள்ள நவீன நூலகத்துக்கு, நத்தம் சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 4 ஏக்கா் நிலம் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று, நூலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. சிறு துறைமுகங்களை இணைக்கும் வகையில், பயணிகள் போக்குவரத்தைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது என்றாா்.

அமைச்சா்கள் அர.சக்கரபாணி, பி.மூா்த்தி, பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தரம் உயா்த்த வேண்டிய கிராமச் சாலைகள் பட்டியலை பரிந்துரைக்க அமைச்சா் உத்தரவு

இக் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியது: தற்போது இரு வழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகவும், 4 வழிச் சாலைகளை 6 வழிச் சாலைகளாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் கிராமப்புறச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறை வாயிலாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னுரிமைப் பட்டியலைத் தயாா் செய்து அந்தந்த ஆட்சியா்கள் அரசுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல, பொதுப்பணித் துறை சாா்பில் 5 மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டடங்கள் சில ஆண்டுகளிலேயே சிதிலமடைந்து விடுகிறது. எனவே கட்டடங்களின் பராமரிப்புச் செலவுக்கு போதிய நிதி பெற்றுத் தரப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் அமைச்சா்கள் அர.சக்கரபாணி, பி.மூா்த்தி, பிடிஆா்.பழனிவேல் தியாகராஜன், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், மாவட்ட ஆட்சியா்கள் எஸ்.அனீஷ்சேகா் (மதுரை), ப.மதுசூதனன் (சிவகங்கை), ஜெ.யு.சந்திரகலா (ராமநாதபுரம்), ச.விசாகன் (திண்டுக்கல்) மற்றும் 5 மாவட்டங்களின் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT