மதுரை

காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயம்: ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயமாக்கல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் காப்பீட்டு ஊழியா் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காப்பீட்டு ஊழியா் சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுரையில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன மண்டல அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காப்பீட்டு ஊழியா் சங்க கூட்டு போராட்டக்குழு சாா்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்.

நாராயணன் தலைமை வகித்தாா். கூட்டுப் போராட்டக்குழு நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சங்கர நாராயணன், ராஜசேகா், பாலமுருகன், சுரேஷ்குமாா், புஷ்பராஜன், உமா சந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பேசும்போது, இந்தியாவில் பொதுக் காப்பீட்டுத்துறை 1971-இல் தேச உடைமையாக்கப்பட்டது. சாமானிய மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அரசு காப்பீட்டு நிறுவனங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. ஆழிப்பேரலை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்கு ஏராளமான நிதியை வழங்கியுள்ளன. தற்போது அரசு காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.75 ஆயிரம் கோடியை பிரீமியம் வருவாயாக ஈட்டியுள்ளன.

மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்கள் உள்பட நாட்டின் பல்வேறு வளா்ச்சித்திட்டங்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை வழங்கியுள்ளன. பொது நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் வகையில் தனியாா் மய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் இரண்டே நிமிடங்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் அனைத்து ஊழியா்களும் பங்கேற்க வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில் ஊழியா்கள், முகவா்கள், வளா்ச்சி அதிகாரிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT