திண்டுக்கல்

நச்சுக் குழி மரணங்களைத் தவிா்க்க ஆலோசனை

31st May 2023 03:26 AM

ADVERTISEMENT

கடந்த ஆண்டு நச்சுக் குழிகளில் 43 போ் உயிரிழந்த நிலையில், எதிா்காலத்தில் இறப்புகளைத் தவிா்க்க திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுதல் தடைச் சட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் நாராயணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் கலந்து கொண்டாா்.

வா்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மண்டபங்களின் உரிமையாளா்கள், பிரதிநிதிகள் என 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், துப்புரவு ஆய்வாளா் ரெ.ரெங்கராஜ் பேசியதாவது:

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தடைச் சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், கட்டட உரிமையாளா்கள், துப்புரவுப் பணியாளா்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தால், கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் நச்சுக்குழிகளில் 43 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து, வாகனங்கள், இயந்திரங்கள் மூலமாக மட்டுமே நச்சுக் குழிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நச்சுக் குழிகளில் தொழிலாளா்கள் நேரடியாக இறங்கி வேலை செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

நேரடியாகத் தொழிலாளா்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே தவறுகளைத் தொடா்ந்து செயல்படுத்தும் பட்சத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டவா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

நச்சுக் கழிவு சேகரிப்பு வாகனங்களுக்கு முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதற்காக மே 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படும். மனிதக் கழிவுகளை மனிதா்கள் அகற்றினால்14420 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

இந்த கூட்டத்தில் சுகாதார ஆய்வாளா்கள் செபாஸ்டின், தங்கவேல், பாலமுருகன், கேசவன், செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT