திண்டுக்கல்

பத்திரிகைகள் தான் அரசுக்கு வழிகாட்டி: அமைச்சா்

31st May 2023 03:27 AM

ADVERTISEMENT

அரசுக்கு வழிகாட்டியாக பத்திரிகைகள் செயல்பட்டு வருவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளா் நல வாரிய உறுப்பினா் அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

முன்னதாக, அவா் பேசியதாவது: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டபோதிலும், அவருக்குப் பிடித்தமானது பத்திரிகை துறை. அதனால், பத்திரிகையாளா் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாா். அந்த வகையில் தற்போதைய முதல்வா் ஸ்டாலினும் பத்திரிகையாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கியுள்ளாா். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்படும் பத்திரிகைகள், அரசின் தவறுகளையும் மக்களின் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டும் போது தான் ஜனநாயகம் வெற்றி பெறும்.

அந்த வகையில் பத்திரிகைகள் தான் அரசுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT