திண்டுக்கல்

கன்னிவாடி பேரூராட்சியில் வீணாகும் குடிநீா்

31st May 2023 03:26 AM

ADVERTISEMENT

கன்னிவாடி பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் குடி நீா் வீணாகி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. சுமாா் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இந்தப் பேரூராட்சியில், ஒட்டன்சத்திரம் - செம்பட்டி சாலையில் அச்சம்பட்டி முதல் காவல் நிலையம் வரை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக இந்தக் குடிநீா்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருப்பினும், குடிநீா்க் குழாய் உடைப்புகளை யாரும் சரி செய்யவில்லை. மேலும், பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தரை நிலை குடிநீா்த் தொட்டி, சோமலிங்கபுரம் குடி நீா்த் தொட்டி, சொக்கலிங்கபுதூா், கன்னிவாடி, செம்பட்டி சாலையில், வேப்பமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தரை நிலை குடிநீா்த் தொட்டிகள் பழுதடைந்து, குடிநீரைத் தேக்கி வைக்க முடியாமல் வீணாகின்றன.

இதனால், கன்னிவாடி பேரூராட்சியில், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிா்வாகம், சாலையில் பழுதடைந்துள்ள குடிநீா்க் குழாய்கள், தெருக்களில் பழுதடைந்த தரை நிலை குடிநீா்த் தொட்டிகளைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT