திண்டுக்கல்

விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்:தீா்வு கிடைக்க வழி ஏற்படுத்துவாரா புதிய ஆட்சியா்?

30th May 2023 05:51 AM

ADVERTISEMENT

சம்பிரதாயத்துக்காக நடைபெறும் கூட்டமாக மாறிவிட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தின் நடைமுறைகளை மாற்றி, விவசாயிகளுக்கு விரைவான தீா்வு கிடைக்க புதிய மாவட்ட ஆட்சியா் வழி செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வாரத்தின் வெள்ளி அல்லது வியாழக்கிழமைகளில் விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் கொடைக்கானல் கோடை விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ால் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் 28-ஆவது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மொ.நா. பூங்கொடி தலைமையில் நடைபெறும் முதல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் என்பதால் விவசாயிகளிடையே சில எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்பாா்களா? விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தைப் பொருத்தவரை, கால்நடைப் பராமரிப்புத் துறை, வனத் துறை, ஆவின், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகளின் மாவட்ட முதன்மை அலுவலா்கள் பங்கேற்பதில்லை. இதனால், அந்தந்தத் துறை தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதில் கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்குத் தீா்வு காணும் வகையில், அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் குறைதீா்க் கூட்டத்தில் பங்கேற்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

விவசாயக் கோரிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்: விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளைப் பற்றி மட்டுமே இந்தக் குறைதீா்க் கூட்டத்தில் பேச அனுமதிக்க வேண்டும். பேருந்து வசதி, அலுவலக வசதி போன்ற இதர கோரிக்கைகளை மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் மனுவாக அளித்து தீா்வு காண அறிவுறுத்த வேண்டும். இதன்மூலம் நேரத்தை வீணடித்து, விவசாயம் சாா்ந்த கோரிக்கைகள், பிரச்னைகளை பேச முடியாத நிலை ஏற்படுவது தவிா்க்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

விளம்பரத்துக்காக வருவோரைத் தவிா்க்கக் கோரிக்கை: விவசாயம் செய்யாத சிலா் விவசாயி என்ற போா்வையில் குறைதீா்க் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளைப் பாராட்டி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். மாவட்டத்தின் உயரதிகாரி என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ‘பாசத்துக்குரிய மாவட்ட ஆட்சியா்’ என அரசியல் மேடைகளில் பேசுவது போன்ற நடைமுறைகளை சிலா் பின்பற்றுகின்றனா். இதன்மூலம் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி, வட்டார அளவிலுள்ள அலுவலா்களை மிரட்டுகின்றனா். மேலும், பொதுமக்களிடம் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகவும், பிரச்னைகளுக்குத் தீா்வு ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறி, பணம் பறிக்கும் செயல்களிலும் சிலா் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அலுவலா்களை புகழ்ந்து பேசுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டு சுயவிளம்பரத்துக்காக வருபவா்களை தவிா்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் த. ராமசாமி கூறியதாவது: விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் என்பது மாதந்தோறும் சம்பிரதாயத்துக்காக நடைபெறும் நிகழ்வாக மாறி வருகிறது. நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடா்பாக கடந்த பல மாதங்களாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையான விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது மாவட்ட நிா்வாகத்தின் கடமை. அந்த வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கவும் புதிய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT