திண்டுக்கல்

காவிரி குடிநீா்த் திட்டப் பணிகள் அடுத்த மாதம் தொடக்கம்: அமைச்சா் அர. சக்கரபாணி

DIN

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீா் வழங்கும் தனித் திட்டத்துக்கான பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளன என உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட எல்லப்பட்டி, மாா்க்கம்பட்டி, ஐ.வாடிப்பட்டி, குத்திலுப்பை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை சாலை தரம் உயா்த்துதல், புதிய சிமெண்ட் சாலைப் பணி, தடுப்பணை அமைத்தல், அரசு ஆரம்பப் பள்ளியில் சமையலறைக் கட்டடம், பால் குளிரூட்டும் நிலையம் உள்ளிட்ட ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். மேலும், சுமாா் 6 ஏக்கா் பரப்பளவில் மரக் கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீா் திட்டம் கொண்டுவர ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தாா். இந்தப் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளன. இதன் மூலம், ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளுக்கும் தினசரி 55 லிட்டா் குடிநீா் வழங்கப்படும். மேலும், கிராமப்புற சாலைகளை நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்து, அதை மேம்படுத்தும் திட்டம் நிகழாண்டு தொடங்கப்படவுள்ளது. 2,000 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.2,000 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதில் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டும் 100 கிலோ மீட்டா் தொலைவுக்குச் சாலை அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் காளாஞ்சிபட்டியில் ரூ.10 கோடியில் விரைவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சா் விரைவில் அறிவிக்க உள்ளாா். எல்லப்பட்டி பகுதியில் மட்டும் 350 பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆதிதிராவிடா் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்துப் பகுதிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரைவில் தொடங்க முதல்வா் உத்தரவிடவுள்ளாா். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு, உயா்கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உயா்கல்வி படிக்கும் பெண்கள் எண்ணிக்கை 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக முதல்வா் தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய விலை இல்லாத காலங்களில் காய்கறிகளைச் சேமித்துவைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிா்பதகக் கிட்டங்கிகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சிகளில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யம்மாள், ஜோதீஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பொன்ராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் முத்துசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், அந்தோணியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT