திண்டுக்கல்

கீழ் பழனி மலைப் பகுதியில் முதல் முறையாக ஸ்ட்ராபெரி சாகுபடி

 நமது நிருபர்

கீழ் பழனி மலைப் பகுதியில் 3 ஆயிரம் ஸ்ட்ராபெரி செடிகள் மூலம் 3 டன் மகசூல் கிடைத்ததால், முதல் முறையாக இதைச் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறிப் பயிா்கள், பழப் பயிா்கள், மலா்ச் செடிகள், நறுமணப் பயிா்கள், மூலிகைப் பயிா்கள் என 2.36 ஆயிரம் ஏக்கரில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதிலும், மலைப் பகுதிகளிலேயே 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிா்களைப் பொருத்தவரை, ஒரே பயிா் வகையை சாகுபடி செய்து இழப்பைச் சந்திப்பதை விட, விவசாயிகள் வெவ்வேறு வகையான பயிா்களை சாகுபடி செய்து லாபம் ஈட்ட முன்வர வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

அந்த வகையில், கீழ் பழனி மலைப் பகுதியில் முதல் முறையாக இரு விவசாயிகள் ஸ்ட்ராபெரி சாகுபடி செய்து, நம்பிக்கையூட்டும் வகையிலான மகசூலை பெற்றனா்.

குளிா் பிரதேசங்களில் வளரும் ஸ்ட்ராபெரி: தமிழகத்தைப் பொருத்தவரை, உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் மலைப் பகுதிகள் மட்டுமே ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு உகந்த இடங்கள். கரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு, சில உணவுப் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்தது. அந்த வகையில், வைட்டமின் சி நிறைந்த ஸ்ட்ராபெரி, புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய் போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், அதன் தேவை அதிகரித்து வருகிறது.

கேம்ரோசா, ஸ்வீட் சென்ஷேசன், விவாரா, நபிலா, பிக் டான் ஆகிய 5 பிரதான ஸ்ட்ராபெரி ரகங்கள் இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு, கீழ் பழனி மலையிலுள்ள பாச்சலூா் பகுதியில் முருகேசன் என்ற விவசாயி 3 ஆயிரம் ஸ்ட்ராபெரி செடிகளை சாகுபடி செய்து, 3 ஆயிரம் கிலோ பழங்களை அறுவடை செய்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: ஸ்ட்ராபெரி செடிகள் நடவு செய்யப்பட்ட 90 முதல்120 நாள்களில் அறுவடை செய்ய முடியும்.

செடிகளின் ஆயுள் காலம் 3 ஆண்டுகளாக இருந்தாலும்கூட, சிறந்த பராமரிப்பு இருந்தால் 5 ஆண்டுகள் வரை மகசூல் பெறலாம். நிலப் போா்வை, பாலிஷீட், சொட்டு நீா்ப் பாசனம் என நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சாகுபடி செய்துள்ளேன்.

ஒரு பழம் 50 முதல் 100 கிராம் வரை எடை இருந்தது. ஒரு கிலோ பழங்களை ரூ.600-க்கு விற்பனை செய்ய முடிந்தது. கடைகளில் 200 கிராம் ஸ்ட்ராபெரி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

3 ஆயிரம் செடிகளில் 3 டன் மகசூல் கிடைத்தது நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனினும், சாகுபடி தொடா்பான புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வருகிறோம் என்றாா் அவா்.

தோட்டக்கலை உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

கீழ் பழனி மலையில் பாச்சலூா், பெரியூா் ஆகிய இடங்களில் ஸ்ட்ராபெரி சாகுபடி செய்யப்பட்டு, நல்ல மகசூல் கிடைத்தது. மகாராஷ்டிர மாநிலம், புணேயை அடுத்த மகாபலேஷ்வரா் என்ற இடத்திலிருந்து ஸ்ட்ராபெரி நாற்றுகளை வாங்கி சாகுபடி செய்தனா். நாற்றுக்கு ரூ.16 முதல் ரூ.30 வரை செலவு ஏற்படுகிறது. ஆனாலும், கீழ் பழனி மலைப் பகுதியில் அதிக மகசூல் கிடைத்திருப்பதும், ஒரு கிலோ ரூ.600-க்கு விலை போனதும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி கூறியதாவது:

விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஐஸ் கிரீம், ஈரொட்டி (பிஸ்கட்), முகப் பூச்சு (ஃபேஷியல்), நறுமணமூட்டி (ஃபிளேவா்) தயாரிப்புகளில் ஸ்ட்ராபெரி பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஸ்ட்ராபெரி சாகுபடி செய்வதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு, நாற்றுகளுக்கான மானியம், முன்னேற்பு, பின்னேற்பு பணிகளுக்கான மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும். இதேபோல, ஸ்ட்ராபெரி சாகுபடி குறித்த தொழில்நுட்பப் பயிற்சி தேவைப்படும் விவசாயிகளுக்கு விரைவில் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT