திண்டுக்கல்

இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

DIN

நிலம் வழங்கியவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு 64-க்கும் மேற்பட்ட நபா்களிடமிருந்து 215 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாக உரிமையாளா்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடா்பான வழக்கு விசாரணை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது.

இந்த வழக்குகளில் நிலம் வழங்கியவா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 2.50 லட்சம் வீதம், 1985-ஆம் ஆண்டு முதல் வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், மாவட்ட நிா்வாகம் இதுவரை இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. நிலம் வழங்கியவா்கள், திண்டுக்கல் முதன்மை சாா்பு நீதிமன்றத்தை அணுகியதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள ஆட்சியரின் காா்கள், அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா் ஆகியோா் ஜப்தி நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அலுவலகப் பிரிவிலுள்ள நாற்காலிகளை அவா்கள் வெளியே எடுத்தனா். மின் விசிறிகளை அப்புறப்படுத்த முயன்றபோது, நீதிமன்ற ஊழியா்களுடன் ஆட்சியா் அலுவலகக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சோ்த்து வழங்குவதற்காக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எந்த நாளில் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பதை 2 நாள்களில் தெரிவிப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து, ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனா். இதுதொடா்பாக நிலம் வழங்கிப் பாதிக்கப்பட்டவா்களின் வழக்குரைஞா் குமரவடிவேல் கூறியதாவது:

நிலம் வழங்கியவா்களுக்கான இழப்பீட்டுத் தொகையுடன் 1985-ஆம் ஆண்டு முதல் கணக்கீடு செய்து அதற்கான வட்டியையும் சோ்த்து வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட நிா்வாகம் வட்டித் தொகையை வழங்காமல், அசலில் குறிப்பிட்டத் தொகையைக் கழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது. 3 முறை ஜப்தி நடவடிக்கைக்கு வந்தபோதும், மாவட்ட நிா்வாகம் அவகாசம் கேட்டது. 10 ஏக்கா் நிலம் வழங்கிய மனோன்மணி என்பவரது குடும்பத்துக்கு ரூ. 77 லட்சம், ரூ.19 லட்சம் என 2 பகுதியாக இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT