திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 40ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இளைஞருக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வினோத் (32). திண்டுக்கல் சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ். இவரது மனைவி கவிதா (37). இதில் வினோத் மற்றும் கவிதா ஆகியோா் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தனா். இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு, சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சிறுமியை திருமணத்திற்காக கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்வதற்கு வினோத்துக்கு, கவிதா உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அதேபோல் கவிதாவும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி. சரண் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அப்போது, வினோத் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 366 மற்றும் 368-ன் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா். அதேபோல், வினோத்துக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 366 (ஏ) -ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். அபராதத் தொகையான ரூ. 50ஆயிரத்தை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT