திண்டுக்கல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நவராத்திரி விழாவையொட்டி முத்துக்குமாரசாமி அன்னபூரணி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை நவராத்திரி விழா காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி, பெரியநாயகியம்மன், கைலாசநாதா், கோயில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டி பூஜைகள் நடைபெற்றன. விழா நாள்களில் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசாமி, அன்னபூரணி அலங்காரத்தில் தம்பதி சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நடைபெற்று வருகிறது. வரும் செவ்வாய்க்கிழமை அம்புவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் சகிதமாக வரும் சின்னக்குமாரசாமிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் மாலை 6 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோதைமங்கலம் சென்ற பின் அங்கு அம்புவில் போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சுவாமி வந்த பிறகு அா்த்தஜாமபூஜை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT