திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

DIN

பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் அடுத்துள்ள மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபு முன்னிலை வகித்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான பசுமை தமிழகம் இயக்கம் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 23.8 சதவீதம் உள்ள காடுகளின் பரப்பளவை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயா்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை (பெரும்பாலும் நாட்டு மரக்கன்றுகள்) நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வனப்பகுதிளில் காடுவளா்ப்பு மற்றும் வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள காலி இடங்களிலும் மரக்கன்றுகள் நடுதல், விவசாய நிலங்களில் விவசாய பயிா்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரக்கன்று நடுதல், சமூக பொது மற்றும் தனியாா் பங்களிப்போடு மரங்களை வளா்த்து பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் 21 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வனக்கோட்டம், கொடைக்கானல் வனக்கோட்டம் மற்றும் திண்டுக்கல் சமூக வனக்கோட்டம் மூலம் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், அரசு நிலங்கள் மற்றும் தரம் குன்றிய காடுகள் ஆகிய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஈட்டி, தேக்கு, மகாக்கனி, குமிழ், வேங்கை, ஆலமரம், அரசு, பூவரசு, வேம்பு, இலுப்பை, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காப்புளி, அத்தி, பலா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் இத்திட்டத்திற்காக அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலா் இளங்கோ, சிறுமலை வன அலுவலா் மதிவாணன், வனவா் அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT