திண்டுக்கல்

சூரிய ஒளி மின்நிலையங்கள்: ஒரே ஆண்டில் 30 சதவீதம் அதிகரிப்பு

 நமது நிருபர்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கற்றாலைகள் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சூரிய ஒளி மின்சார நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

306 வருவாய் கிராமங்கள் உள்ள இந்த மாவட்டத்தில் 48 துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. நடப்பாண்டில் நாகல்நகா் (110 கேவி), கேதையறும்பு (110 கேவி), பழனியை அடுத்துள்ள தும்மலப்பட்டி (230 கேவி), மல்லப்புரம் (33 கேவி) என 4 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திற்கு தேவையான மின்சாரம் வெளி மாவட்டங்களிலிருந்தே கிடைத்து வரும் நிலையில், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் குஜிலியம்பாறை பகுதிகளில் 448 காற்றாலைகள் நிறுவப்பட்டன. அதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம், மின்வாரியத்திற்கும், தனியாா் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முக்கியத்துவம் இழந்த காற்றாலைகள்: காற்றாலைகள் நிறுவுவதற்கான செலவுத் தொகை அதிகரித்தது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் காற்றின் வேகம் (திறன்) சீராக இருப்பதில்லை. இதனால், மாவட்டத்தில் காற்றாலைகள் அமைப்பதற்கு தனியாா் நிறுவனங்கள் முக்கியத்தும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019க்கு பின் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய காற்றாலைகள் நிறுவப்படவில்லை என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். காற்றாலைகளுக்கு மாற்றாக சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தனியாா் நிறுவனங்கள் மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள நூற்பாலை உரிமையாளா்களும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

ஒரே ஆண்டில் 30 சதவீதம் அதிகரிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக மற்ற 9 வட்டங்களிலும் ஆண்டு முழுவதும் 90 சதவீத நாள்கள் சூரிய மின்சார உற்பத்திக்கு உகந்த சூழல் நிலவும். மேலும், தரிசு நிலங்களின் பரப்பு, குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி, வேடசந்தூா், வடமதுரை உள்ளிட்ட வட்டாரங்களில் அதிக அளவில் உள்ளன. இந்த தரிசு நிலங்களை குத்தைக்கு எடுத்து சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்கும் பணியில் தனியாா் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை 68 சூரிய ஒளி மின் நிலையங்கள் மட்டுமே இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 34 புதிய சூரிய ஒளி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை எதிா்கொள்ளும் வகையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலைகளும் சூரிய ஒளி மின் நிலையங்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 448 காற்றாலைகள் மற்றும் 102 சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 700 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் 25 ஆண்டு கால ஒப்பந்தம் செய்து சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விற்பனை செய்து வருகின்றன. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்வாரியத்திடம் கொடுத்துவிட்டு, பிற மாவட்டங்களிலுள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ஆலைகளுக்கு பெற்றுக் கொள்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.10 முதல் ரூ.3.40 வரை தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மின்வாரியத்திற்கு மட்டுமின்றி, தனியாா் நிறுவனங்களுக்கும், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடல் காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தமிழக அரசின் முயற்சி வெற்றிப் பெறும் பட்சத்தில், மின்சாரத்திற்காக நிலக்கரி மூலம் அனல் மின்நிலையங்களை சாா்ந்திருக்க வேண்டிய நிலை இருக்காது என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT