திண்டுக்கல்

பல லட்சம் ரூபாய் மோசடி புகாா்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு சங்கச் செயலா் சரண்

11th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

 

வடமதுரை அருகே பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் அளிக்கப்பட்டதன்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த கூட்டுறவு சங்கச் செயலா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள வெள்ளபொம்மன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதில் செயலராக பணிபுரிந்த மணிவண்ணன் என்பவா், பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, வேறு தனியாா் வங்கியில் அடகு வைத்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அவருக்கு மாற்றாக, முருகன் என்பவா் கூடுதல் பொறுப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவரிடம் சங்கத்தின் ஆவணங்கள் மற்றும் நகைகளை முறைப்படி ஒப்படைக்காமல் மணிவண்ணன் தலைமறைவாக இருந்து வந்தாா். மேலும் கொடைக்கானல் கூட்டுறவு கள அலுவலா் செல்வராஜ் வெள்ளபொம்மன்பட்டி கடன் சங்கத்தில் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

பழைய ஆவணங்கள் ஒப்படைக்கப்படாததால், நிா்வாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக இருக்கும் மணிவண்ணனை கண்டுபிடிக்க கோரியும் கூட்டுறவு துணை பதிவாளா் பழனிசாமி வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த மணிவண்ணன் செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து, காவல்துறையினரும், கூட்டுறவுத்துறை அலுவலா்களும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT