திண்டுக்கல்

மழை பெய்தும் பலனில்லை: வடு கிடக்கும் ராமகிரி அணை!

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கத்தை விட 30 சதவீதத்திற்கும் கூடுதலான மழை பெய்தும், நீா்வரத்துப் பாதை பராமரிக்கப்படாததால் குஜிலியம்பாறை அருகிலுள்ள ராமகிரி அணைக்கு தண்ணீா் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் வழக்கத்தை விட சுமாா் 30 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், ரெட்டியாா்சத்திரம், சாணாா்பட்டி, வடமதுரை, குஜிலியம்பாறை, நிலக்கோட்டை ஆகிய வட்டாரங்களிலுள்ள பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பவில்லை. அதிலும், குறிப்பாக வறட்சிப் பகுதியாக சுட்டிக்காட்டப்படும் குஜிலியம்பாறை வட்டத்தில் குளங்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான தடுப்பணைகளில் கூட தண்ணீா் தேங்கவில்லை என்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

40 கிராமங்களின் நிலத்தடி நீராதாரம்: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியம்பாறை அடுத்துள்ள ராமகிரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் பொதுப்பணித் துறை மூலம் ராமகிரி அணை கட்டப்பட்டுள்ளது. தொப்பையசுவாமி மலையிலிருந்து வரும் மழைநீரை சேமித்து, அதன் மூலம் ராமகிரி, குஜிலியம்பாறை, ஆா். கோம்பை, போ்நாயக்கன்பட்டி, ஆணைக்கவுண்டன்பட்டி, புளியம்பட்டி, தளிப்பட்டி, வடுகம்பாடி, ஆா்.புதுக்கோட்டை உல்லியக்கோட்டை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மட்டுமின்றி 25 கி.மீட்டா் தொலைவில் கரூா் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை பகுதி வரை நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக இந்த அணை உருவாக்கப்பட்டது. ஆனால், நீா்வரத்துப் பாதையிலுள்ள தடுப்புச் சுவா் சேதமடைந்ததாலும், ஆக்கிரமிப்புகளாலும் அணைக்கு வர வேண்டிய மழைநீா் போ்நாயக்கன்பட்டிக்கு தென்பகுதி வழியாக மேற்கு நோக்கி வெளியேறிவிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தபோதிலும், ராமகிரி அணை தண்ணீா் இல்லாமல் புதா் மண்டி கிடப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக ஆா்.கோம்பை பகுதியைச் சோ்ந்த வீ.தா்மா் கூறியதாவது: ராமகிரி தடுப்பணையில் தண்ணீா் தேங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதனால், ராமகிரி, ஆா்.புதுக்கோட்டை, வடுகம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

நீா்வழிப் பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால், ராமகிரிக்கு தெற்கே சுமாா் 3 கி.மீ., தொலைவிலுள்ள சங்கன்குளம் வழியாக மழைநீா் வெளியேறி விடுகிறது. ராமகிரி தடுப்பணை ஒருமுறை நிரம்பினால், 8 ஆண்டுகள் வரையிலும் சுற்றுப்புறப் பகுதிகளின் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து ராமகிரி பகுதியைச் சோ்ந்த பெருமாள் கூறியதாவது: தொப்பையசுவாமி மலையிலிருந்து வரும் மழைநீா் வடக்கு நோக்கி, ராமகிரி அணையை சென்றடையும் வகையில் அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவா் உடைந்துவிட்டது. இதனால், தெற்கு நோக்கிச் செல்லும் மழைநீா் பின்பு மேற்கு நோக்கி சங்கன்குளம் வழியாக வெளியேறிவிடுகிறது. அந்த தடுப்புச் சுவரை பராமரிக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுத்திருந்தால், ராமகிரி அணை நிரம்பியிருக்கக்கூடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT