திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 10.3 செ.மீ. மழை: 52 வீடுகளை சூழ்ந்தது வெள்ளம்

DIN

வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்திலுள்ள மக்கள் மன்றத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை நலம் விசாரித்த வருவாய்த் துறையினா்.

திண்டுக்கல், நவ. 26: திண்டுக்கல் பகுதியில் 10.3 செ.மீ. மழை பெய்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த 52 வீடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் 155 போ், முகாமில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த கனமழையானது, பல்வேறு இடங்களிலும் இரவு வரை நீடித்தது. இதனால், திண்டுக்கல் பகுதியில் சாலைகள் மட்டுமின்றி, ரயில்வே தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கின.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தபோதிலும், திண்டுக்கல்லில் அதிகபட்சமாக 10.3 செ.மீட்டா் மழையளவு பதிவானது. அடுத்தபடியாக, வேடசந்தூரில் 10.1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) விவரம்: கொடைக்கானல் 47, பழனி 72, சத்திரப்பட்டி 80.4, நத்தம் 72, நிலக்கோட்டை 44, காமாட்சிபுரம் 70, கொடைக்கானல் படகு குழாம் 36.

மாவட்டத்தில் 52 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

திண்டுக்கல் மரியநாதபுரம் அடுத்த சக்திபுரம் மற்றும் ராஜீவ் நகா் பகுதிகளில் 148 வீடுகள் உள்ளன. செட்டிக்குளத்தை ஒட்டி கட்டப்பட்டிருந்த இந்த வீடுகளில் 52 வீடுகளை, வியாழக்கிழமை பெய்த கன மழையினால் வெள்ளம் சூழ்ந்தது.

தகவலறிந்த கிழக்கு வட்டாட்சியா் சந்தனமேரி கீதா தலைமையிலான வருவாய்த் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று தண்ணீரில் சிக்கிய பொதுமக்கள் 155 பேரை மீட்டு, மேற்கு மரியநாதபுரத்திலுள்ள மக்கள் மன்றத்தில் தங்கவைத்தனா்.

அந்த முகாமில், பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. மேலும், வருவாய்த் துறையினரின் சொந்த முயற்சியால், போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டன.

வீடுகளை இழந்தவா்களுக்கு நிவாரணம்

அதேபோல், திண்டுக்கல் கிழக்கு வட்டத்துக்குள்பட்ட சேவியா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 12 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது தெரியவந்தது. அந்த வீடுகளின் பாதிப்புகளுக்கேற்ப மொத்தம் ரூ.40,100 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

ரேஷன் கடையில் 7 டன் பொருள்கள் சேதம்

பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைக்குள் வெள்ள நீா் புகுந்ததால், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, கோதுமை, சா்க்கரை, பருப்பு உள்ளிட்ட மொத்தம் 7 டன் பொருள்கள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. அதேநேரம், சேதமடையாமல் எஞ்சியிருந்த பொருள்கள் வேன் மூலம் பாதுகாப்பாக மற்றொரு இடத்துக்கு வெள்ளிக்கிழமை காலை எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT