திண்டுக்கல்

முழு பொதுமுடக்கம் எதிரொலி: திண்டுக்கல்லில் பூக்கள் விலை 4 மடங்கு வீழ்ச்சி

DIN

திண்டுக்கல்: முழு பொதுமுடக்கம் எதிரொலியாக திண்டுக்கல் மலா் சந்தையில், அனைத்து வகையான பூக்களின் விலையும் 4 மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் சுற்றுப்புறப் பகுதிகளிலும், சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மலா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் மல்லிகை, கனகாம்பரம், முல்லை, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள், திண்டுக்கல்லில் உள்ள தினசரி மலா் சந்தைக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம்.

திண்டுக்கல் சந்தையில் கொள்முதல் செய்யப்படும் பூக்களை, ஈரோடு, கரூா், சேலம், திருப்பூா், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளில் வியாபாரிகள் அனுப்பி வந்தனா். கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளதால், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மலா் விவசாயிகள் மட்டுமின்றி பூ வியாபாரிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனா்.

திண்டுக்கல் மலா் சந்தையிலிருந்து நாளொன்றுக்கு 40 டன் பூக்கள், வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பூக்கள் கொள்முதல் செய்வதற்கு பெரும்பாலான வியாபாரிகள் வரவில்லை. இதனால் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. உள்ளூா் விற்பனையை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனா். இதனால், கடந்த 15 நாள்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை செவ்வாய்க்கிழமை சந்தையில் 4 மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த மலா் விவசாயி சகாயம் கூறியதாவது: கடந்த 15 நாள்களுக்கு முன்பு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு ரூ.70க்கு மட்டுமே விற்பனையானது. அதேபோல் ரூ.150-க்கு விற்பனையான முல்லைப் பூ ரூ.30-க்கும், ரூ.80-க்கு விற்பனையான ரோஜா ரூ.15-க்கும், ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ரூ.100-க்கும், ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கொண்டை ரூ.5-க்கும், ரூ.60-க்கு விற்பனையான சம்மங்கி ரூ.5-க்கும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட செண்டுமல்லி ரூ.7-க்கும், ரூ.100-க்கு விற்பனையான அரளி மற்றும் செவ்வந்தி முறையே ரூ.10 மற்றும் ரூ.30-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது மலா் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு, கோயில்களும் மூடப்பட்டுள்ளன. கல்யாணம் முதல் காதுகுத்து நிகழ்ச்சிகள் வரை எளிமையாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனை சரிவடைந்துள்ளது. பாதிப்படைந்துள்ள மலா் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT