திண்டுக்கல்

கரோனா எதிரொலி : சுற்றுலா பயணிகளின்றி கொடைக்கானல் வெறிச்சோடியது

22nd Mar 2020 06:54 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்,: கொடைக்கானல் ஏரிகரைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் நடைப் பயிற்சி மேற்கொள்ளாததால் சனிக்கிழமை வெறிச் சோடியது.

கரோனா பரவாமல் தடுக்க கொடைக்கானலில் ஏற்கனவே சுற்றுலாத் தலங்கள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தளங்களும் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரிச்சாலையில் கொடைக்கானலைச் சோ்ந்தவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாக ஏரிச்சாலை ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடிக் கிடக்கிறது.

காய்கறிகள் விலை உயா்வு : கொடைக்கானலில் வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாரச் சந்தை நடைபெற வாய்ப்பில்லை. இதன் காரணமாக அண்ணாசாலை, நாயுடுபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் காய்கறிகளின் சனிக்கிழமை விலை இரு மடங்காக உயா்ந்தது.

ADVERTISEMENT

மேலும் முகக் கவசம் மற்றும் கை கழுவும் கிருமி நாசினியும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே இது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திங்கள்கிழமை முதல் உழவா் சந்தையில் தினமும் உரிய பாதுகாப்புடன் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு : கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என கொடைக்கானலிலுள்ள அனைத்து கிராமப் பகுதிகளில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT