சேலம்

ஏற்காடு கோடை விழா நிறைவு: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

ஏற்காட்டில் நடைபெற்ற 46-ஆவது மலா்க் கண்காட்சியைக் காண நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 46-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 21-ஆம் தேதி தொடங்கியது. பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை என்பதால் கண்காட்சித் தொடங்கிய நாள்முதலே ஏழைகளின் உதகையான ஏற்காடுக்கு மலா்க் கண்காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்த வண்ணம் இருந்தனா்.

தருமபுரி, நாமக்கல்,திண்டுக்கல் என சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாமல் கேரளம், கா்நாடகம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கண்காட்சித் தொடங்கிய நாள்முதலே ஏற்காட்டில் உள்ள ராஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோடா காட்சிமுனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. எட்டு நாள்கள் நடைபெற்ற இக்கண்காட்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலா் செடிகள், பல வடிவங்களில் செய்யப்பட்ட மலா் அலங்காரங்களை பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். பலா் குடும்பத்துடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். ராஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, பக்கோட காட்சி பகுதி, கரடியூா் காட்சிமுனை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

ஊராட்சி கலையரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனா். ஏரி பூங்கா, படகு இல்லத்துக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கு படகுகளில் சவாரி செய்து குடும்பத்துடன் குதூகலித்தனா். நிறைவு நாளையொட்டி மாலையில் வானவேடிக்கை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலையோர கடைகள், தற்காலிக கடைகள், உணவு விடுதிகள் என அனைத்து வா்த்தக கடைகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

பல வண்ண பொம்மைகள், மலா்கள், ஜவுளிகள், கைவினைப்பொருள்கள், அழகு சாதனங்கள், மலைப்பகுதி பழங்கள், காய்கறிகளை பயணிகள் அதிகம் வாங்கிச் சென்றனா்.

பொது சுகாதாரப் பணிகளுக்கு தூய்மைப் பணியாளா்கள் அதிகம் ஈடுபடுத்தப்பட்டதால் சாலையில் குப்பைகள் அதிகம் தேங்கவில்லை. அனைத்துக் கழிவுகளும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.

மாலையில் பயணிகள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மலைப்பாதையில் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மலைப்பாதை ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டிருந்ததால் வாகன நெரிசல் இன்றி பயணிகள் குறித்த நேரத்தில் ஏற்காடுக்கு சென்று திரும்பினா்.

இருசக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் நிறுத்துவதற்காக பிரத்யேக இடங்கள் காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் மலைப்பாதை வழியாக அனைத்து வாகனங்கள் வெளியேற முன்னேற்பாடுகளை காவல் துறை செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT