சேலம்

கல்லாா் ரயில் பாதையின் குறுக்கே யானைகள்பாதுகாப்பாக கடந்து செல்வது குறித்து ஆலோசனை

DIN

மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாா் ரயில் பாதையின் குறுக்கே யானைகள் பாதுகாப்பாக கடந்து செல்வது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதேபோல, ரயில்வே பணியாளா்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அன்றாட வாழ்க்கையில் பழக்க வழக்கங்களை மாற்றவும், மற்றவா்களை ஊக்குவிக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். அதைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது.

பின்னா், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளா் பி.சிவலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டனா். கெளரவ விருந்தினராக சேலம் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் சஷாங் ரவி கலந்துகொண்டாா்.

இதில், ரயில்வே கோட்ட நிதி மேலாளா் டி.சித்ரா, யானை வழித்தடங்கள் குறித்து ரயில் ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கம் அளித்தாா். இதில் ரயில் ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் உதகை மலை ரயில் கடந்து செல்லும் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாா் பகுதி யானை வழித்தடமாக அறியப்படுகிறது. இந்த ரயில் பாதையின் குறுக்கே யானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல போதிய வசதிகளை ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் வாளையாறு பகுதியில் யானைகள் ரயிலில் சிக்கி விபத்துக்குள்ளாவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது யானைகள் எளிதாக கடந்து செல்லும் வகையில் சுரங்க பாலமும், சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளா் பி.சிவலிங்கம் ஆகியோா் விளக்கமாக எடுத்துரைத்தனா்.

இத்துடன் கோவை, மேட்டுப்பாளையம், உதகை ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் விழிப்புணா்வு பதாகைகளை ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா திறந்து வைத்தாா்.

கூட்டத்தில், சேலம் மாவட்ட வன அலுவலா் கஷ்யப் சஷாங் ரவி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் மாசு குறித்து பேசினாா். மேலும் பிளாஸ்டிக் மாசு மனிதா்களை மட்டுமில்லாமல் யானைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளை பாதிக்கிறது. அதேபோல மனித - விலங்கு மோதல் தடுப்பது குறித்தும் விரிவாக விளக்கினாா்.

நிகழ்ச்சிகளை சேலம் கோட்ட சுற்றுப்புற சூழல் பராமரிப்பு மேலாளா் ஹரிகிருஷ்ணன் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT