சேலம்

அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டம்:பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோா்கள் பயன்பெறலாம்

1st Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோா்கள் பயன்பெறலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் மூலமாக பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக, பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் 2023-2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் தொழில்முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்தி, சேவை வணிக நிறுவனங்கள் தொடங்க, விரிவுபடுத்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக 35 விழுக்காடு மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கான தகுதி பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் இனத்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதிகள் எதுவும் இல்லை. வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். மேலும், உற்பத்தி சேவை தொழில்களான குளிா்பதனக் கிடங்குகள், விவசாயம் சாா்ந்த வாகனங்களை வாடகைக்கு விடுதல், ஆடு, மாடு, கோழிப் பண்ணை, பட்டுப்புழு தயாரித்தல், கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், பெட்ரோல் விற்பனைக் கூடங்கள், சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் மற்றும் வியாபாரம் போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.

எனவே, ஆா்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோா்கள் இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று தங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவோா்கள் மற்றும் ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்வோா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் தே.சிவகுமாா், தமிழ்நாடு சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தலைவா் கே.மாரியப்பன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் மணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், மாவட்ட தொழில்மைய திட்ட மேலாளா் நா.நாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT