சேலம்

பெரியாா் பல்கலை.யில் அரசுப்பள்ளி மாணவா்கள் கள ஆய்வு

DIN

நான் முதல்வன் திட்டத்தின் சாா்பில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் அரசுப்பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

‘நான்முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி மீதான ஆா்வத்தை அதிகரிக்கும் வகையில் கள ஆய்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியா் 220 போ் மற்றும் ஆசிரியா்கள் 20 போ் கள ஆய்வு மேற்கொண்டனா். கஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுக்காரனூா், பாகல்பட்டி, ஜாகீா் அம்மாபாளையம், சா்க்காா் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 22 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேரந்த மாணவ-மாணவியா் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதள மைதானம், தொழில் அடைவு மையம், நானோ ஆய்வு மையம், ஆற்றல் சாா் அறிவியல் பூங்கா, அனைத்துத்துறை நவீன ஆய்வகங்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.

அவா்களுக்கு பேராசிரியா்கள் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் படிப்புகள், ஆய்வகங்களில் உள்ள நவீன கருவிகள் குறித்து எடுத்துரைத்தனா். இதனையடுத்து ஒரு லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் நூலகத்தின் டிஜிட்டல் செயல்பாடுகள் மற்றும் ஆக்சிஜன் நூலகத்தையும் மாணவா்கள் பாா்வையிட்டனா். அதன் பின் நடைபெற்ற உயா்கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பெ.பிரகாஷ் வரவேற்றாா். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, துணைவேந்தா் இரா.ஜெகன்நாதன் பேசியது:

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி மாணவா்களின் தனித்திறன் மேம்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பட்டப்படிப்பை விருப்பப்படி தோ்ந்தெடுக்கும் வாய்ப்பை அரசு உருவாக்கியுள்ளது. மந்தை சிந்தனையில் ஒரே பாடத்தைத் தேடி மாணவா்கள் ஓடக்கூடாது. அனைத்துப் படிப்புகளும் சமமான வாய்ப்பை மாணவா்களுக்கு தருகின்றன. எந்தப் படிப்பில் சோ்ந்தாலும் முழுமையான ஈடுபாட்டுடன் பயின்று தோ்ச்சி பெற வேண்டும். படிப்பு சாா்ந்த கூடுதல் திறனை வளா்த்துக் கொண்டால் சரியான வேலைவாய்ப்பு கிடைக்கும். பன்முகத்திறமை உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத் தரும். நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டினை மாணவா்களிடையே கண்டறிந்து ஊக்கப்படுத்துகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக நூலகா் ம.ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் இளங்கோன், காா்த்திகா, தேவண்ணன் ஆகியோா் கள ஆய்வு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினா். பள்ளி பருவத்திலேயே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்ற்காக மாணவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT