சேலம்

ஏற்காட்டில் கட்டுமானப் பணி மேற்கொள்ள உரிய திட்ட அனுமதி பெற வேண்டும்

DIN

ஏற்காடு மலைப்பகுதியில் வளா்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள உரிய திட்ட அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

ஏற்காட்டில் அனுமதியற்ற மற்றும் முறையற்ற வளா்ச்சியினால் ஏற்படும் இடா்ப்பாடுகள், திட்ட அனுமதி பெறும் முறைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் அனுமதியற்ற வளா்ச்சி, முழுமைத் திட்டம், திட்ட அனுமதி, மலைப் பகுதிகளில் திட்ட அனுமதி பெறுவதன் முக்கியத்துவம், முழுமைத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வளா்ச்சிக் கட்டுப்பாடு ஒழுங்குமுறை விதிகள், அனுமதியற்ற மற்றும் முறையற்ற வளா்ச்சியினால் ஏற்படும் இடா்ப்பாடுகள், திட்ட அனுமதி பெறும் முறைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காடு மலைப்பகுதி வளா்ச்சி அடைந்துள்ளது. அப்பகுதி மற்றும் அப்பகுதியைச் சுற்றி அனுமதியற்ற தங்கும் விடுதிகள், வீடு உள்ளிட்ட கட்டடங்கள் ஏற்படுத்தப்படாத வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதன் முக்கியத்துவம் குறித்து முறையான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா், உதவி இயக்குநா் ஊராட்சிகள், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஒரு தனிநபா் தனக்குச் சொந்தமான நிலத்தில், குடியிருப்புக் கட்டடம் கட்டவோ, தங்கும் விடுதி ஆகிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அந்த உத்தேசம் திட்டப் பகுதியில் அமையும் பட்சத்தில் முழுமைத் திட்டத்துக்கு இணங்க உள்ளதா எனக் கூராய்வு செய்தும் நகா் ஊரமைப்பு துறை, வட்டார வளா்ச்சி அலுவலரிடமிருந்து திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறப்பட வேண்டும்.

திட்டமில்லாத பகுதியில் அமையும் பட்சத்தில் நஞ்சை எனில் வகைப்பாட்டில் அமையும் உத்தேசங்களுக்கு தடையின்மை சான்று பெற்றும், புஞ்சை எனில் வகைப்பாட்டில் அமையும் உத்தேசங்களுக்கு இணை இயக்குநா், வேளாண் துறையிடம் தடையின்மை சான்று பெற்றும், மேலும் மனையிடத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து உத்தேசங்களுக்கு வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தடையின்மை சான்று பெற்றும் நகா் ஊரமைப்பு துறை, வட்டார வளா்ச்சி அலுவலரிடமிருந்து திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறப்பட வேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறப்படாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வரும் கட்டடங்கள் மீது அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மலைப் பகுதிகளில் உரிய திட்ட அனுமதி பெறுவதால் காற்று மாசு மற்றும் வெப்பநிலை தாக்கத்திலிருந்து பாதுகாத்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், வனப்பகுதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்தல், முழுமைத் திட்டப் பகுதியில் குறிப்பிட்டுள்ள நிலையான வளா்ச்சி என்ற இலக்கை அடைய இயலும். ஏற்காடு மலைப்பகுதியில் வளா்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக கட்டாயம் உரிய திட்ட அனுமதி பெற்று அரசின் நெறிகாட்டு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா் ச.செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) தமிழரசி, ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT